கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் விளக்கு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப விழா வரும் டிசம்பர், 6ஆம் தேதி நடக்கிறது. விளக்குகளை தயார் செய்யும் பணிதொடங்கியது.






கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் விளக்கு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப விழா வரும் டிசம்பர், 6ஆம் தேதி நடக்கிறது. இதற்கு, களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளுக்கு அதிக தேவை ஏற்படும். ஒரு மாதத்துக்கு முன்பாக களிமண் விளக்குகளை தயார் செய்யும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம். கரூரில் அண்ணா வளைவு, காளிபாளையம் தான்தோன்றி மலை, லாலாபேட்டை , கொடிக்கால் தெரு மற்றும் மாயனூரில் அதிகளவில் மண் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, கோயில்களில் நாள் தோறும் பயன்படுத்தப்படும், ஐந்து முகாம், ஒருமுகம் கொண்ட மண் விளக்குகள் மற்றும் சிறிய அளவிலானவிளக்குகள்,  மின் மோட்டார் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும், ஒரு மாதம் உள்ள நிலையில்,  களிமண் விளக்குகளை உற்பத்தி செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால் தொடர்மழை  மற்றும் களிமண் தட்டுப்பாடு காரணமாக விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் மண் விளக்குகளின் விலையும் சற்று உயர்ந்து வருகிறது.


 




 மண் விளக்குகள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:


 மண் விளக்குகளை வெயிலில் காயவைத்து,  சூலையில் வைத்து சுட வேண்டும்.  இல்லை என்றால்,  விளக்குத்தரமாக இருக்காது, தொடர்மழையால்,  மின் மோட்டார்கள் மூலம் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் 1000 விளக்குகளை தனியாக சூளையில் வைத்து சுட்டால்,  அதிக அளவில் செலவு ஏற்படும்.  இதனால் விளக்குகளின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போது 100 சிறிய விளக்குகள் 80 ரூபாய்க்கும்,  பெரிய விளக்குகள் 120 ரூபாய்க்கும்,  ஐந்து முகம் கொண்ட விளக்கு ஒன்று,  பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


 மேலும் கரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளில் களிமண் கிடைப்பது அரிதாக உள்ளது.  இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் களிமண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க,  மண் விளக்குகள் உற்பத்தி செய்வதை சிலர் நிறுத்தி விட்டனர். கார்த்திகை தீப பண்டிகைக்கு மண் விளக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.  இவ்வாறு மண் விளக்கு உற்பத்தியாளர்கள்  தொடர்ந்து மழை பெய்து வந்தால் தங்களது உற்பத்தி மிகவும் பாதிக்கும் என்று விளக்கு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.