வடலூர் சத்திய ஞான சபை பொதுவெளியில் சர்வதேச மையம் அமைப்பதை அரசு மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்ருட்டி மடப்பட்டு முதல் நெய்வேலி வரை நான்கு மணி நேரம் தொடர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெய்வேலி ஆர்ச் அருகே அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசுகையில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை, கட்சியின் தொண்டனாக இருந்து திறந்து வைக்கிறேன். தொண்டன் என்பது நிரந்தரமானப் பதவி. அதிமுகவில் உழைக்கின்ற தொண்டன் முதல்வராகக்கூட முடியும். உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியவில்லை, முடக்க முடியவில்லை. தமிழகத்தில் அதிகம் உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா நமக்காக வாழ்ந்து நிறைய திட்டங்களை வழங்கி மறைந்த தலைவர்கள். இந்த கட்சிக்கு வாரிசு கிடையாது, நாம் தான் வாரிசுகள்.
நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இங்குள்ள கூட்டமே அத்தாட்சி. கடலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. எத்தனையோ கூட்டத்திற்கு நான் சென்று உள்ளேன். ஆனால், நெய்வேலி வரும் வகையில் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.
அதிமுக குறித்து பத்திரிகை, ஊடகங்கள் தவறான பிம்பத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் கூட்டம். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் எண்ணம் தான் வெற்றி பெறும். அதிமுக கட்சியை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார், வழக்குப் போட்டார். காற்றுக்கு தடை போட முடியாது. அதுபோல அதிமுகவில் உழைக்கும் தொண்டனை கட்டுப்படுத்த முடியாது. எத்தனை வழக்கு போட்டாலும் எதிர்கொள்வோம். இன்று திமுகவினர் வழக்குகளை பார்த்து நடுங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு திராணி இருந்தால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். பல கட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜி, அதிமுக இயக்கத்திற்கு துரோகம் செய்தார். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை தான் கிடைக்கும்.
அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட கட்சி. ஏழை மாணவர்கள் படிப்பதற்கு பல்வேறு திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்கள். அந்த திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், திமுக அரசு இலவச மடிக்கணினி, தாலிக்கு தங்கும் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அப்போது நிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடரும் என்றார். 520 அறிவிப்புகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இதற்கு பாராளுமன்றத் தேர்தல் தகுந்த பாடம் புகட்டும்.
நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். நீட் தேர்வு ரத்து செய்ய ஜெயலலிதாவும், நாமும் முயற்சி எடுத்தோம். நீட் தேர்வு தமிழகத்தில் விலக்கு வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,600 பேர் இன்று மருத்துவம் படிக்கின்றனர். இயற்கை சீற்றத்தின் போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் துன்பத்தை களைந்து நிவாரணம் வழங்கியது அதிமுக தான்.
கடலூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். திமுக ஆட்சியில் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியர் பெருமாள் ஏரி ஆழப்படுத்தியது, குடிமராமத்து பணிகள் மேற்கொண்டது, ஏரி வண்டல் மண்ணை விவசாயிகள் இயற்கை உரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
லாபத்தில் இயங்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முயன்றபோது அதன் 5 சதவீத பங்குகளை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வாங்கி அதை பாதுகாத்தார். என்எல்சி இந்தியா நிறுவனம் 13 ஆயிரம் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். வீடு, நிலம் வழங்கியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சமூகப் பொறுப்புணர்வு நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது. வெளியிடத்தில் அமைக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டி உள்ளதை கண்டிக்கின்றோம். இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நெய்வேலி ஜவஹர் பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை என்எல்சி இந்தியா நிறுவனம் நிரந்தரம் செய்ய வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அல்லது கூட்டணிக் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.