சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு (23, 24) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி
ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்  ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஏன் தகவல் தொழிநுட்ப துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “ தகவல் தொழில்நுட்பத்தை  முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். அதே மாற்றங்களை தகவல் தொழில்நுட்பத்திலும் கொண்டு வர தான் அவர் மாற்றம் செய்யப்பட்டார். நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாகும். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்‌ என்று நாங்கள் அவரை அழைப்போம். வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார். 


மேலும், “ சென்னையில் 1000 வைஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கிட புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க இந்த ஆண்டு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.