தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடுகளுக்காக சென்ற பயணம் முற்றிலும் தோல்வியில் தான் முடிந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளிய்யிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், ”கள்ளச்சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்தச் சுற்றுலாவின் மூலம் 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புலகாங்கிதம் அடைந்துள்ளார்.
வெளிநாட்டு பயணம்:
பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் 1.258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் 3,233 கோடி என்று வந்தது. மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு 1,342 கோடிதானா? இதில் எது உண்மை? எதை நம்புவது ? விடியா அரசின் முதலமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும்போது, 'கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
அதேபோல், ஃபாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை விடியா திமுக ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டது.
வாய்ச்சவடால்:
அதுமட்டுமல்ல, நமது மாநிலத்தில் பெரு முதலீடுகளை செய்திருக்கின்ற ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் CEO வந்த போது கூட விடியா அரசின் முதலமைச்சர், அவர்களை சந்திக்காததன் விளைவாக, கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகள் கர்நாடகாவிற்கும், தெலுங்கானாவிற்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இப்படியாக, வெளி மாநிலங்களுக்குச் சென்ற முதலீடுகளையும், நிறுவனங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு கற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச்சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்! என்பது போல், தமிழ் நாட்டில் தற்போது இயங்கும் பல நிறுவனங்களே தங்கள் முதலீடுகளை வேறு மாநிலங்களில் செய்து வருகின்றன.
துபாய் பயணம் முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும், சிறு முன்னேற்றம்கூட. இல்லையே என்று நான் அறிக்கை வெளியிட்டதும், முன்னெடுப்புகள் நடந்து வருவதாக தொழில் துறை அமைச்சர் பெயரில் பசப்பு வார்த்தைகளால் அறிக்கை விடுகிறார்.
காதில் சுற்றுப்பயணம்:
தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கெனவே தொழில் செய்துவரும் நிறுவனங்களையும், மற்ற மாநிலங்களுக்குச் செல்லவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலேயே தொழில் தொடங்க வைக்குமாறு, திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சரையும், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தொழில் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.