EPS:  ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருக்கிறார். 


எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:


சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. காவல் அதிகாரியை மாற்றுவதால் ஏதும் மாறி விடப்போவதில்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு காவல்துறையினருக்கு சுதந்திரம் இல்லை. இதனால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு போன்ள சம்பவங்கள்தான் நடந்து வருகிறது, எனவே அதிகாரிகளை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சீராகி விடாது” எனத் தெரிவித்துள்ளார். 


ரவுடிகளின் ராஜ்ஜியமாக தமிழ்நாடு - ஈபிஎஸ்:


தொடர்ந்து பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடைமை. அவரை திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என சொல்லப்படுகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். எந்தெந்த துறைகளில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பது இந்த அரசின் லட்சியம். முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் சட்டம் - ஒழுங்கு காக்கப்பட்டு இருந்து இருக்கும். தமிழகத்தில் பெண்கள்,  பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என யாருக்குமே பாதுகாப்பாற்ற சூழலே நிலவுகிறது தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. நிர்வாக திறனற்ற ஆட்சியே நடைபெற்று வருகிறது. உள்கட்சி பாக பிரிவினை சண்டையில்தான் கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் அதலபாதாளத்தில் உள்ளன.


ஓபிஎஸ் பற்றி பேச ஒன்றுமில்லை - ஈபிஎஸ்:


செந்தில்பாலாஜி வழக்கை திசை திருப்ப வேண்டும் என்றே , சிவில் வழக்கை வேண்டுமென்றே கிரிமினல் வழக்காக மாற்றி எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய திமுக அரசு முயல்கிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ், எனவே அவரைப்பற்றி பேச ஒன்றுமில்லை” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.