அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், வல்லம்படுகையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்கினார். அப்போது பேசிய அவர், “ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவித் தொகை திட்டத்தை ஸ்டாலின் அரசு முடக்கிவிட்டது.
அதிமுக ஆட்சியில் மடிக்கணினி கொடுத்தோம். ஆனால் அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் அரசாக ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை தற்போதைய அரசு படிப்படியாகக் குறைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாமக்கல், பொம்மைகுட்டைமேடில் நடைபெற்ற அதிமுகவின் 51ஆவது ஆண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி திமுக பிளவை ஏற்படுத்த நினைப்பதாக சாடினார். ”அதிமுகவை ஒருபோதும் திமுகவால் பிரிக்க முடியாது. அதிமுக உடையவில்லை ஒன்றாக தான் இருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியை அமைப்போம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெரும்.
அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அதனால், அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்த திமுக நினைக்கிறது. அதிமுகவை ஒருபோதும் திமுகவால் பிரிக்க முடியாது” எனப் பேசினார்.