மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது பேசியதை எதிர்த்து தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.


சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்பி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் அதிமுக சார்பில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக போட்டியிடுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டதட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய தயாநிதி மாறன், “உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது, மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.


எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தவில்லை என்று அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.


மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் சுமார் ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம்தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்திற்கு மேல் என் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்துள்ளேன். 17 கோடி ரூபாய் என் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது.


அதைக் கொண்டு என் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளேன். எனவே, அவதூறு பரப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரைத் தண்டிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.


இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.