நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அதிமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும்”எனத் தெரிவித்துள்ளார் இபிஎஸ்.


ஒரே நாடு ஒரே தேர்தல்:


”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளது.


குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறினால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.


நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ள நிலையில், 3ஆவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக சிறப்பு குழுவை அமைப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


அதிமுக ஆதரவு:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மறுமுனையில் பாஜக தலைமையிலான கூட்டணியும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.


இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) பக்கத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும். மத்தியிலும் மாநிலத்திலும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்த இடைவிடாத ஆட்சி காலத்தை வழங்கும். இந்த திட்டம் நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். இதனால், அதிக வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஜனநாயக பங்கேற்பை மேம்படுத்தும்.


ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆட்சிக்கு நடுவே அறிவிக்கப்படும் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சிக்கு அதிக கவனம் வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.