மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி புயலை விட வேகமாக செயல்பட்டு கஜா புயல் காலத்தில் பாதிப்புகள் சீரமைக்கப்பட்டது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் ஆற்றிய உரையில், “தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுகதான். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுகதான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், எந்த நபராலும் முடியாது. தொடங்கிய ஆறு மாதத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே கட்சி அதிமுகதான். 1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றிபெற்றேன்.


 நான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்.


கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை அதிமுக அரசு காத்தது. கொரோனா காலத்தில் 11 மாதம் மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கொடுத்தோம். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ. 2, 247 கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். 2011-21 வரையிலான 10 ஆண்டு கால ஆட்சியை பொற்காலம் என மக்கள் கொண்டாடினர்.


காவிரிநீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு. தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை மீட்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். 2008ல் ஜெயலலிதா கச்சதீவை மீட்க நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011ல் சட்டப்பேரவையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியது. ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில்தான் கச்சத்தீவை மீட்போம் என முதலமைச்சர் பேசுகிறார். மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். 


நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். நீட் தேர்வை கொண்டுவந்து திமுக; நீட் தேர்வை தடுக்க போராடியது அதிமுக. 


டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ. 10 கோடி முறைகேடு நடக்கிறது. முறைகேடு பார்களில் கலால் வரி செலுத்தாமல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எங்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக வெல்வோம். ” என தெரிவித்தார்.