அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 


அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக  வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 


இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார். இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது. 


இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது தீர்ப்பு குறித்து பேசினார்.


அதில், “நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என அம்மா கோயிலில் வேண்டிக் கொண்டேன். சில நிமிடத்திலேயே அற்புதமான செய்தி வந்தது. திமுக ஒரு தீயசக்தி அதனை அழிக்கவே அதிமுகவை தொடங்கியதாக எம்ஜிஆர் சொன்னார். அதே வழியில் பல துன்பங்கள், இடர்பாடுகளை சகித்துக் கொண்டு தமிழகத்தில் தீய சக்தியை ஒடுக்கி ஜெயலலிதா சாதித்து காட்டினார். தனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக இயங்கும் என சொன்னது இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது. 


சில எட்டப்பர்கள், அதிமுக அழிக்க நினைத்தவர்கள், முடக்க நினைத்தவர்கள், திமுக பி டீமாக இருந்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு விட்டது. கடந்த 6,7 மாதங்களாக அதிமுக தொண்டர்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இனிமேல் அதிமுக 3, 4 ஆக போய்விட்டது என சொல்லாமல் ஒன்றாக இயங்குகிறது என ஊடகங்கள் சொல்ல வேண்டும். இது குடும்ப கட்சி கிடையாது. தீர்ப்பு என்ன வருமோ என்று கலங்கி போயிருந்தேன். இரவில் தூங்காமல் இருந்துள்ளேன். தற்போது எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  “உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என தெரிவித்துள்ளது. தர்மம், நீதி, உண்மை இன்றைக்கு வென்றுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கும். நீதிமன்ற தீர்ப்போடு அவர்களின் கதையும் முடிந்து விட்டது. இனி எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவை பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு சிலப் பேரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்” என தெரிவித்தார். மேலும், “டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் எங்களிடம் வரத் தொடங்கி விட்டார்கள் எனவும் அவர் கூறினார்.