மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு மருத்துவரை லஞ்சம் தருவதாக மிரட்டியதாலும், லஞ்சப்பணத்தை பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமலாக்கத்துறை அதிகாரி கைது:


இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல உதவி இயக்குனர் பிரிஜேஷ் பெனிவால் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ டிசம்பர் 1ம் தேதி மதியம் 1.15 மணியளவில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் மதுரை அமலாக்கத்துறை அலுவுலகத்திற்கு  ஐ.பி. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் அடையாள அட்டை கேட்டபோது, அவர்கள் நழுவிவிட்டனர்.


லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்:


அதன்பின்பு ஒரு மணி நேரம் கழித்து 2.30 மணியளவில் 35 பேர், சாதாரண உடையில் தங்களை காவல்துறையினர் என்றும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி்கொண்டு ஊடகங்களுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கும்பலாக புகுந்தனர். அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டபோது அவர்கள் தயக்கம் காட்டினர். மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யசீலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், சோதனை செய்வதற்கான வாரண்ட் காட்டவில்லை. தங்களை காவல்துறையினர் என்று சொல்லிக்கொண்ட அவர்கள் சீருடையிலும் இல்லை, அவர்களிடம் பேட்ஜூம் இல்லை.


அவர்கள் 35 பேரும் டிசம்பர் 1ம் தேதி மதியம் 2.30 மணி முதல் டிசம்பர் 2ம் தேதி காலை 7.15 மணி வரை சோதனை நடத்தினர். இந்த நேரத்தில் அவர்கள் 35 பேரும் கீழ்க்கண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் நுழைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்கு தொடர்பே இல்லாத அமலாக்கத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது அங்கித்திவாரியின் அறை அவ்வப்போது பூட்டப்பட்டது. ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகத்தையே சூறையாடிவிட்டனர். 


போலீசா? தனி நபர்களா?


அவர்கள் தொடர்ந்து பலரிடம் பேசி பல முக்கிய ஆவணங்களின் தகவல்களை அளித்தனர். அவர்கள் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செய்வதாக கூறினர். 4 அதிகாரிகளுக்கு மட்டுமே ஆய்வு செய்வதற்கும், 2 பேர் அதை பார்ப்பதற்கு மட்டுமே உத்தரவு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் சூர்யகலா, இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு, இன்ஸ்பெக்டர் குமரகுரு, வருவாய் ஆய்வாளர் வெற்றிவேலன், வி.ஏ.ஓ. முத்துகிருஷ்ணன் ஆகியோரே அந்த 6 பேர்.






அதில் 35 பேர் என்று குறிப்பிடவில்லை. ஆனால், அங்கு இருந்தனர். அவர்கள் அடையாள அட்டை காட்டவில்லை. அவர்கள் போலீசா? அல்லது தனி நபர்களா? என்றும் தெரியவில்லை. இதுவரை எத்தனை ஆவணங்கள் மாயமாகி இருக்கிறது என்றும் தெரியவில்லை. எத்தனை ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டது என்றும் தெரியவில்லை. எங்களிடம் 35 பேர் வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.


வழக்குப்பதிவு:


இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது கீழ்க்கண்ட காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டவிரோதமாக சோதனை நடத்தியதற்காகவும், அனுமதியற்ற பலரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைய அனுமதித்திற்காகவும், பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்களை திருடியதற்காகவும், பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் ஆவணங்களை செல்போன் மற்றும் பிற மின்னனு சாதனங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டது என மேலே கூறிய காரணங்களுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேவையான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கிறோம்


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.