புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகளையும் அவர் திறந்து வைத்தார்.


கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். இந்தத் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவாக தொடங்கி வைக்கப்படுகிறது.


யார் இந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்?


இந்தியாவில் பெண் உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடியவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர்களில் ஒருவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையர். இவர் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி-சின்னம்மாள் ஆகியோருக்கு மூவலூரில் மகளாக பிறந்தவர் ராமாமிர்தம் அம்மையர். இவர் தேவதாசி எனப்படும் இறைவனுக்கு பணி செய்யும் பெண்கள் குடும்ப வகுப்பில் பிறந்தார். 


இந்த தேவதாசி வகுப்பில் பிறந்திருந்தாலும் அந்த முறையை ஒழிக்க பெரும்பாடு பட்டார். இவருடைய குடும்ப வறுமை காரணமாக 5 ரூபாய்க்காக இவருடைய பெற்றோர்  சிறுவயதில் இவரை ஒருவரிடம் விற்றனர். அதன்பின்னர் அவருடைய வளர்ப்பில் இருந்தார். இவர் பெரியவரான உடன் 80 வயது மதிக்க தக்க நபரிடம் விற்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரிடமிருந்து தப்பி இவருக்கு இசை மற்றும் நடனம் கற்று தந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 






பெண்களின் சுயமரியாதைக்காக போராட்டம் நடத்த முற்பட்டபோது காந்தி கூறிய கருத்து காரணமாக காங்கிரஸ் கட்சியில் இவர் சேர்ந்தார். அத்துடன் சுதந்திர போராட்டத்தில் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில்  இந்திய தேசிய கொடியை ஏற்ற பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்திற்கு தேசிய கொடி வடிவில் சேலை அணிந்து வந்தார். 


தேவதாசி முறையுடன் சேர்ந்து தீண்டாமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்த்து போராடினார். மேடையிலே சுதந்திர போராட்டத்தை பேசக் கூடாது என்ற பிரிட்டிஷ் அரசின் உத்தரவை இவர் சிறப்பாக எதிர்கொண்டார். அதற்காக தான் மேடையில் பேச நினைத்ததை ஒரு கரும்பலகையில் எழுதி அனைவருக்கும் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் சிலர் பழமை வாதத்தை கடைபிடிக்க தீவிரமாக இருந்தனர். அவர்களின் கருத்தில் மாறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பெரியார் வெளியேறினார். அவருடன் சேர்ந்து ராமாமிர்தம் அம்மையாரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். 


அதன்பின்னர் நீதி கட்சியிலும் பணியாற்றினார். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1929ஆம் ஆண்டு நீதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இயற்றப்பட்டது. இவர் தன்னுடைய 80வயதில் 1962ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தன்னுடைய வாழ்வில் பெரும்பான்மையான நாட்களை பெண்கள் சுயமரியாதைக்காக பாடுபட்ட ராமாமிர்தம் அம்மையார் பெயரில் பெண்களுக்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.