கட்சி துரோகம் நினைத்தவர்கள் அடுத்த 24 மணிநேரத்தில் கட்டம் கட்டப்படுவார்கள். இது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் செய்கிற சபதம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு திமுகவில் இடம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை எத்தனை முறை பார்ப்பது. சம்பத், எம்.ஜி.ஆரில் தொடங்கி வைகோ வரை பார்த்துவிட்டோம். இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜி தலைமை வகித்தார். திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி(திருப்பத்தூர்) வில்வநாதன்(ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: "தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. 150 நாட்களில் அமைச்சர்கள் 1 மாதம்தான் நிர்வாகத்தை பார்த்துள்ளோம். மீதி நாட்களில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டோம். முதல்வர் தினமும் தடுப்பூசி செலுத்துவதை பார்த்து வருகிறார். உலகிலேயே தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டும்தான். இதனால், தான் தமிழகத்தில் கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. பக்கத்தில் உள்ள கேரளா, ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையால் தான் இங்கு கொரோனா குறைந்துள்ளது. முதல்வரின் எண்ணம் மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான். அமைச்சர்கள் முழு வேகத்தில் இன்னும் பணிகளை தொடங்கவில்லை.
எங்கள் பணிகளை சிறப்பாக ஆரம்பிபதற்கு முன்னாள் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டது. 150 நாட்களில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி என்ன செய்தது என பார்த்தால் மக்களின் உயிரை காப்பாற்றியது முக்கியமாக கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம் வழங்கிவிட்டோம். ஒரு ஆண்டு அவகாசம் இருந்தால் மற்றவர்கள் திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிப்பெற்றால் எங்கள் செயலுக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவு அளித்தீர்கள் என்று பொருள். ஒரு வேளை அதிமுக வெற்றிப்பெற்றால் திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என அதிமுகவினர் கூறுவார்கள். இந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் கூட நிற்க அவர்களுக்கு தைரியம் வராது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்கு பிறகு அனைத்து சங்கங்களும் கலைக்கப்படும். இதற்கான கையெழுத்து போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் அறிவிப்பு வெளியிட முடியவில்லை.
சர்க்கரை, பால்வளம் சங்கம் கூட கலைக்கப்படும். அதன் பிறகு உடனடியாக தேர்தல் நடத்தப்படாது. 2 அல்லது 3 ஆண்டுகள் திமுகவினர் தான் சங்கங்களை கண்காணிக்க வேண்டும். எனவே, தேர்தலில் இடம் கிடைக்காதவர்களுக்கு சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். இது தேர்தல் காலத்தில் கொடுக்கப்படும் வாய்ப்பு என யாரும் எண்ண வேண்டாம். தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் எங்களை அடித்தால் கூட நாங்கள் பொறுத்துக்கொள்வோம். ஆனால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்கமாட்டோம்.
கட்சிக்கு துரோகம் நினைத்தவர்கள் அடுத்த 24 மணிநேரத்தில் கட்டம் கட்டப்படுவார்கள். இது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் செய்கிற சபதம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு திமுகவில் இடம் இல்லை.கட்சிக்கு துரோகம் செய்தவர்களை எத்தனை முறை பார்ப்பது. சம்பத்,எம்ஜிஆரில் தொடங்கி வைகோ வரை பார்த்துவிட்டோம். இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
திமுக நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். கட்சிக்காக பாடுபட வேண்டும். சீட் கிடைக்கவில்லை என ஆதங்கம் படவேண்டாம். மாவட்டச்செயலாளர், ஒன்றிய செயலாளர், நகரச்செயலாளர் மூலம் பட்டியல் வாங்கி பிறகு அவர்களுக்கு உரிய பதவி, பொறுப்பு, வழங்கப்படும். அதேபோல வாரியம் கலைக்கப்படும். தகுதியானவர்களுக்கும், கட்சிக்காக பாடுபடுவோர்களுக்கு வாரிய பொறுப்பு வழங்கப்படும்’’. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், வாசிக்க:
Kanhaiya Kumar : மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் நண்பனாகியுள்ளேன் - கன்ஹையா குமார்