தமிழ்நாட்டில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்றத்தில் கலப்பு முறையில்  வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெய்நிகர் விசாரணை:


”தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை மேற்கோள்காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீதிமன்ற அரங்குகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கின்றனர்.  தினமும் (வெள்ளிக்கிழமை மட்டும் இல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள வழக்கின் கோரிக்கை அடிப்படையில்) சென்னை முதன்மை இருக்கையிலும், மதுரை கிளையிலும், ஏப்ரல் 10, 2023 திங்கள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.


பார் உறுப்பினர்கள் மற்றும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க மெய்நிகர்/கலப்பின விசாரணையின் வசதியை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து அதிகார வரம்புகளிலும் உள்ள வழக்குகளை மின்-தாக்கல் செய்வதற்கான வசதியை,(முன்ஜாமீன்களுக்கு மட்டுப்படுத்தாமல்), கட்டாயமாக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக் கொள்ளுமாறு பார் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் மேற்படி ஏற்பாட்டை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


நீதிமன்ற விசாரணை:


2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. 2020 முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது கடுமையான ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியில் செல்ல கூட தடை விதிக்கப்பட்டது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடாது என்பதற்காக மெய்நிகர் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து வழக்குகளும் இந்த முறையில் விசாரணை செய்யப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் வழக்குகள் நீதிமன்ற அறையில் விசாரணை நடத்தப்பட்டது.


தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல் மற்றும் இரண்டாம் அலையில் கடைப்பிடிக்கப்பட்டது போலவே தற்போதும் கலப்பு முறையில்  வழக்குகள் வரும் திங்கள் முதல் (ஏப்ரல் 10ஆம் தேதி) விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.