TN Medical Facility: போதிய மருத்துவர்களை நியமிக்கவிட்டால் பேறுகால இறப்புகளை தடுக்க வார் ரூம் உதவாது என அரசு மருத்துவர்கள் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு:


அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகப்பேறு இறப்புகளை தடுக்க 'வார் ரூம்' அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டுள்ள தமிழக 
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், அடிப்படை பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய நம் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். இருப்பினும் துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.


”மருத்துவர்கள் பற்றாக்குறை”


மேலும், “குறிப்பாக தமிழகத்தில் கிட்டத்தட்ட கடந்த 10, 15 வருடங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் மிக, மிக குறைவாக உள்ளது.  உயிர்காக்கும் துறையில் அடிப்படையாக  தேவைப்படும் HR எனப்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமல், இங்கு மாற்றத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என கேள்வி எழுப்பட்டுள்ளது.


”மகப்பேறு வார் ரூம் பலனளிக்காது”


தொடர்ந்து, “ RSRM மகப்பேறு மருத்துவமனையில்  மகப்பேறு துறையில் 24 உதவி பேராசிரியர் இடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளது. அதைப்போல வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 மகப்பேறு மருத்துவர்களுக்கான பணியிடங்களில் 21 இடங்கள் காலியாக உள்ளது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 9 மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 மகப்பேறு மருத்துவர்களுக்கான பணியிடங்களில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் தபோதிய மருத்துவர்களையும்,செவிலியர்களையும் நியமனம் செய்யாமல்,  மகப்பேறு இறப்பை குறைக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது எந்தவகையிலும் உதவாது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை:


எனவே, “தமிழகத்தில் மகப்பேறு இறப்பை வெகுவாக குறைத்திட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000 க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 'சீமாங்க்' மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்” என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.