தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக இதுவரை 109 டிகிரி வரை பதிவாகியுள்ளது. ஈரோடை தொடர்ந்து கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகபட்சமான வெயில் பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.


அந்த வகையில் மே 1 ஆம் தேதி முதல் 3 தேதி வரை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  3°-5°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் வெப்ப அலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகவில்லை என்றாலும், காற்றின் ஈரப்பதம் காரணமாக வெளியே செல்லும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் அதாவது காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம். இந்த நேரங்களில் வெளிச் செயல்பாடுகள் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் அல்லது நீர்சத்து நிறைந்த பழச்சாறுகளை குடிக்கலாம். மதுபானங்களை அருந்துவது தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரனமாகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.