மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், 40க்கும் மேற்பட்ட மருந்துகள் தரம் இல்லாதவை எனவும் கரூரில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


 




 


கரூர் அடுத்த தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.


 




 


 


அப்போது அவர் கூறியதாவது: மருந்து கடைகளில் 24 மணி நேரமும் குளிர்சாதன இயந்திரங்கள் இயங்குவதால் வணிக மின் கட்டணத்தில் இருந்து, வீட்டு பயன்பாட்டு கட்டணமாக மாற்றி தர வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனை தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒரு சில கார்ப்பரேட் நிறுவன மருந்துகளை, அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கடைகளில் விலை குறைவு என்ற காரணம் காட்டி மாற்று மருந்து கொடுப்பதால் நோயாளிகளுக்கு அந்த மருந்துகள் வேலை செய்வதில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கண்டறிந்து உடனடியாக தடை செய்ய வேண்டும்.


 




மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும், 40க்கும் மேற்பட்ட மருந்துகள் தரம் இல்லாதவை என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. உடனடியாக அந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் மட்டுமே எங்கள் சார்பு கடைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. மீறி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.