MR Vijayabaskar: நில அபகரிப்பு வழக்கில் தேடப்பாடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய, சிபிசிஐடி போலீசார் வடமாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவும், தேடலும்:
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது, ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12-ந்தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. அதன் முடிவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, வழக்கு விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் அவர் வடமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை பிடிக்க தனிப்படைபோலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்ததுள்ளனர்.
வழக்கு விவரம் என்ன?
கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்து இருந்தார். அதில்,” வெள்ளியணை பிரகாஷ் மகள் ஷோபனா, செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஷோபனாவுடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் என 4 பேரும் சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது. அதோடு உண்மையான ஆவணத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, உண்மையான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெற்றுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் வழங்கினர். மேலும் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளார் வழங்கியதாக 'நான்டிரேசபிள்' (ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை சமர்பித்தனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி நிலுவையில் இருந்து ஆவணம் விடுவிக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பிலான அந்த 22 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக மறுநாளே என்னிடம் புகாரளித்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
விசாரணையில் அம்பலமான உண்மை:
புகார் தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது அம்பலமானது. மேலும், போலி சான்றிதழ் கொடுத்துதான் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதியானதால், கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதனை தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்” என சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கோரியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.