பொதுமக்கள் யாரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு  கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்ல வேண்டம் என அமைச்சர் கே. என். நேரு  அறிவுறுத்தியுள்ளார்.


கே. என். நேரு செய்தியாளர் சந்திப்பு:


சென்னையில் நடந்த புயல் முன்னெச்சரிக்கை பற்றிய ஆய்வுக்  கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைகளுக்காக  ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கோரிக்கையாக வைக்கிறோம். சாக்கடை குழிகளில் மழைநீர்  தேங்காதவாறு எந்திரங்கள் வைத்து அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மழைநீர் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் மழைநீர் வடிந்து விடுகிறது” என தெரிவித்துள்ளார்.


”அடிப்படை தேவைகள் தயார் நிலையில் உள்ளன”


மேலும், ”முன்னுரிமை அளிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மழைநீர் வடிகால் பணிகள் நடத்தப்பட்டன. இரண்டாயிரத்து 43 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், வழக்கமாக தண்ணீர் தேங்கும் பிரகாசம் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தற்போது தண்ணீர் தேங்குவதில்லை. ஆனால், இரண்டாம் கட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட சில பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மிச்சம் இருப்பதால் தண்ணீர் தேங்கியுள்ளது. அதற்கும் விரைந்து உரிய தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். பெரும்பாக்கம், மேடம்பாக்கம், கேளம்பாக்கம், ஒஎம்ஆர் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதெல்லாம் சென்னை மாநகராட்சி என கூறப்படுகிறது. அதெல்லாம் ஊரகப் பகுதிகள் தான். ஆனால், அங்கும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 90 இடங்களில் மோட்டர் பம்புகளும், 179 ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதபடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழைநீர் தேக்கம் மற்றும் கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்ற நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அளவு உணவும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் தயார் நிலையில் உள்ளன.


”அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன”


98 சதவிகிதம் மழைநீர் வடிகால் பணிகள் பூர்த்தியடைந்து இருந்தாலும், ஆங்காங்கே குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டதால் தான் மழைநீர் வடியவைல்லை. தற்போது அந்த அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தேவையான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. இருந்தாலும், மக்களை பாதிக்காத வண்ணம் மழைநீர் தேங்கும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.