சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பிஎஸ் நிறைவு செய்த 24 வயதான தனுஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 38 வயதான மருத்துவர் விஜய் சுரேஷ் கண்ணா, திருச்சி அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் குமார், ஆகியோர் பணியில் இருக்கும் போது அடுத்தடுத்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளனர்.  இதே போல், சென்னை தனியார் மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் காந்தியும் பணியில் இருக்கும் போது உயிரிழந்தார். 


இது குறித்து தேசிய நலவாழ்வுத்திட்டத்தின் விபத்து காய சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரியும்  முட நீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத் கூறுகையில், மருத்துவ உலகில் இருவேறு வகையான நிர்பந்தத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றுவதாக தெரிவித்தார். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,  தினசரி 14 மணி நேரம் பணி செய்வதால் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், இதனால் சராசரியாக 90 ஆக இருக்க வேண்டிய இதய துடிப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு  150-க்கும் மேல் உள்ளதாகவும் கூறினார். பெரும்பாலான மருத்துவர்கள் இதய பரிசோதனை செய்துகொள்வதே இல்லை என்றும் இதன் காரணமாகவே எதிர்பாராத நேரத்தில் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். 


மேலும் தமிழகத்தில் உயிரிழந்த 4 மருத்துவர்களுக்கும் புகைப்பழக்கமோ, மது பழக்கமோ இல்லை என்றும் மிகவும் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்த நிலையில் அவர்கள் இறந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.


அமைச்சர் விளக்கம்


இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பணி சுமையின் காரணமாக 4 மருத்துவர்கள் இறப்பு என்பது முற்றிலும்  தவறான தகவல். காலி பணியிடங்கள் நிரப்பும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க 


Biparjoy Cyclone: நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்.. கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..! புயலின் நிலவரம் என்ன?


Senthil Balaji Health: தனியார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சையா..? தயாராகும் மருத்துவ குழு..!