மதுரை கீரைத்துறை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி மீது  கொலை கொள்ளை கஞ்சா கடத்தல் வழிப்பறி உள்ளிட்ட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடைசியாக தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்த போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தால் இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளைக்காளி மீது கடந்த 2005ல் பதியப்பட்ட வழக்குகளே இன்னும் நிலுவையில் உள்ளது. காவல்துறையினர் விசாரணையும் முறையாக நடத்துவதில்லை. எனவே மனுதாரருக்கு  ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினார். இதனை தொடர்ந்து நீதிபதி கொலை கொள்ளை என 30 வழக்குகள் இருக்கக் கூடிய சூழலில் காவல்துறையினர் ஏன் முறையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? இவ்வாறு இருந்தால் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட காட்சிகள் எவ்வாறு சாட்சி சொல்லுவார்கள்? பலர் சாட்சிகள் இறந்திருக்கலாம்.


காவல் துறை சார்பாக மாதந்தோறும் நடக்கக்கூடிய குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை தலைவர், காவல்துறை ஆணையர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குற்றத்தடுப்பு கூட்டம் என்பது பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து,  குற்றவாளி குறித்த அனைத்து தகவல்களையும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல்துறை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையையும் வருகின்ற 13 ஆம் தேதி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


 




 

போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில், காலியாக உள்ள 2 நீதிபதிகள் நியமனம் எப்போது ? -  மதுரைக்கிளை நீதிபதி கேள்வி. 

 

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கைதிகள் தனுஷ் மற்றும் சிவகாளை  ஆகியோர்  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் , தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், போதை பொருள் தடுப்பு வழக்குகளை  விசாரிக்கும் வகையில் மதுரையில் 3  நீதிமன்றங்கள் உள்ளன. இந்த 3 நீதிமன்றங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு நீதிபதி தான் உள்ளார். மற்ற 2 கூடுதல் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிப்கப்பட வில்லை.

 

இதனால் போதை பொருள் தடுப்பு வழக்குகள் முழுமையாக விசாரணை நடத்த முடியாமல்,  வழக்குகள் தேங்கி உள்ளன.  சுமார் 1200 கைதிகள் பல்வேறு  சிறையில் உள்ளனர் . இதனால் போதை பொருள் வழக்குகள் தேக்கமடைந்து உள்ளன" என கூறினார்.  அரசு தரப்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, மதுரையில்  உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில், காலியாக உள்ள 2 நீதிபதிகள் எப்போது நியமனம் செய்யப்படுவர் ? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இது குறித்து விரைவாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என கூறி வழக்கு விசாரணையை மார்ச் 1 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்