DMK Salem Manadu: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு, நொறுக்குத்தீனி மற்றும் செல்ஃபி பாயிண்ட் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


திமுக இளைஞரணி மாநாடு:


நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். மாநிலம் முழுவதுமிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




தொண்டர்களுக்கு நொறுக்குத்தீனி


தொண்டர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:


மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு எந்தவித இன்னல்களும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில், மாநாடு நடைபெறும் பகுதியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநாடு நடைபெறும் பகுதிக்குள் செல்ல 5  வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைத்து, பார்க் செய்ய ஏதுவாக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



நொறுக்குத்தீனி, செல்ஃபி பாயிண்ட்:


இந்நிலையில், மாநாட்டு திடலில் தொண்டர்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளின் மீது மஞ்சள் பை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், ரொட்டி, மிக்சர், ஜாம் மற்றும் கேக்” ஆகிய நொறுக்குத்தீனிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு, மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தங்களது நினைவிற்காக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக பிரத்யேக செல்ஃபி பாயிண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சரின் உருவப்படத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தொண்டர்களுக்கான செல்ஃபி பாயிண்ட்


தயாராகும் ருசியான விருந்து உணவு:


மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்காக திமுக சார்பில் சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியும், மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணியும் தயாராகி வருகிறது. மட்டன் பிரியாணியுடன் சிக்கன் 65, பிரெட் அல்வா, தயிர்சாதம் வழங்கப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணியுடன் கோபி 65, பிரெட் அல்வா, தயிர் சாதம் வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் விறகு அடுப்பில் சுடச்சுட தயாராகி வருகிறது.  மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 40, 000 கிலோ மட்டனும், சிக்கன் 65க்காக 2000 கிலோ சிக்கனும் வாங்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் சமையல் செய்யும் நபர்கள் மற்றும் சப்ளையர்கள் என மொத்தம் 5000 ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக உணவு தேவைப்பட்டாலும், உடனடியாக சமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.