DMK Salem Manadu: சேலத்தில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.



திமுக இளைஞரணி மாநாடு:


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒட்டுமொத்த திமுகவையும் உற்சாகப்படுத்தும் வகையிலும்,  உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை மேலும் ஒளிரூட்டும் வகையிலும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் இருந்தே நடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் பரப்புரை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கண்களை கவர்ந்த டிரோன் கண்காட்சி:


மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றே சேலம் சென்று விட்டார். அங்கு, மாநாட்டிற்கான சுடரை ஏற்றி வைத்ததோடு, கன்னியாகுமரியில் தொடங்கி மாநாடு நடைபெறும் பகுதியை வந்தடைந்த புல்லட் பேரணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகமாக வரவேற்றார். இதையடுத்து, 1,500 டிரோன்கள் பங்கேற்ற கண்காட்சியும் நடைபெற்றது. அதில் அறிஞர் அண்ணாவின் உருவம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையொப்பம் போன்ற உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இதைதொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் மாநிலம் முழுவதிலுமிருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விழாவிற்கான ஏற்பாடுகள்:


 மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேர், மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேர் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்காக 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கும் வகையிலான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மதியம் வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


நிகழ்ச்சி நிரல்:


ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார்.  மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைப்பார்.  மாநாட்டினையொட்டி மொழிப் போர் தியாகிகளின் படங்கள் திறக்கப்பட உள்ளன. இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்கி, மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர்.  மாலையில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றிட,  இளைஞரணி செயலாளரின் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்


பாதுகாப்பு பணிகள்:


லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாநாடு நடைபெறும் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால், சேலம் மாவட்ட காவல்துறையால் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.