சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தற்போது தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதன்படி இப்போது சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சராக இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மூன்று முறை சேலம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜேந்திரனுக்கு, அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அதிகம் பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மூன்றரை ஆண்டுகள் பிறகு அமைச்சராவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்து வந்த பாதை:
குறிப்பாக, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். இவர் சென்னை குருநானக் கல்லூரியில் பி.ஏ., பி.எல். பயின்றுள்ளார். பின்னர் 1985 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்தார். பின்னர், 1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். இதைத்தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மற்றும் 2001 ஆம் ஆண்டு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொறுப்பு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு போக்குவரத்து தொ.மு.சவில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பல்வேறு வகித்து வந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு பெற்று தற்போது வரை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்:
மேலும் அரசு பொறுப்புகளில் ராஜேந்திரன் அவர்கள் வகித்த பொறுப்புகள் பார்க்கும்போது, 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர், பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமைச்சர் ராஜேந்திரன்:
சேலம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்து வரும் ராஜேந்திரன் அவர்கள் பல்வேறு கட்சி பொறுப்புகளிலும் பொதுப்பணியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்தார். இந்த நிலையில் தற்போது முதன்முறையாக திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் விவசாயத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு திமுக அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளார். இதனால் சேலம் மாவட்ட திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.