கோவை கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது சரமாரி குற்றச்சாட்டு வைத்து வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, "அரசியல் கட்சிகள் மக்களிடம் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அண்ணாமலை தன் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள கோமாளித்தனமாக செயல்படுகிறார். 


கோவை சம்பவத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய காவல்துறைக்கு அண்ணாமலை தொடர்ந்து களங்கம் கற்பிக்கிறார். கோவையில் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறார் அண்ணாமலை. சென்னைக்கு அடுத்ததாக வளர்ச்சிடையும் கோவையின் தொழில் வளர்ச்சியை நசுக்கிறார் அண்ணாமலை. 


சமூக பதற்றத்தை உருவாக்கி அரசியல் செய்வது மட்டுமே பாஜக மற்றும் அண்ணாமலையின் உள்நோக்கம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை கண்காணிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது. கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களை கர்நாடகாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் அண்ணாமலை.


2019இல் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட தற்போது இறந்த நபரை ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது" என்றார்.


முன்னதாக, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. பதிவு செய்த (அக்.28) முதல் தகவல் அறிக்கை தகவல் நேற்று முன்தினம் வெளியானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசைத் திருப்ப முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.


இதையடுத்து, தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட  பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்னவென்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.


இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.


இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத  தடுப்பு சட்டப்பிரிவு ( UAPA)  சேர்க்கப்பட்டலோ அல்லது தேசியப் புலனாய்வு முகமை சட்டம், 2008இல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ, தேசியப் புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.


அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, மத்திய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.  அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.