துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை.
இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்த போது, அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பார்சல்களை கைப்பற்றினார்கள். பாா்சல்களை திறந்து பார்த்த போது, அதனுள் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். மூன்று பார்சல்களிலும்,1.036 கிலோ தங்கப்பசை இருந்ததை பறிமுதல் செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 46.15 லட்சம். இதையடுத்து சிவகங்கை பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கிடையே துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது, உடைமைகளுக்குள் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தங்க செயின்களின் மொத்த எடை 814 கிராம். அதன் சர்வதேச மதிப்புரூபாய் 36.26 லட்சம்.இதையடுத்து அந்த பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து துபாயிலிருந்து வந்த இரண்டு விமானங்களை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், சிவகங்கை, சென்னை ஆகிய இரண்டு பயணிகளிடமிருந்து ரூபாய் 82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்க பசை மற்றும் தங்க செயின்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சிடி பிளேயரில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர் சுமார் 17.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தார் . அவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல அதே பயணியிடம் சுமார் 3.15 லட்சம் மதிப்புள்ள சிகரெட் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடத்திய சோதனையில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து வரப்பட்ட 23.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்