தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


இந்தநிலையில், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : மதுரை உயர்நீதிமன்றம் அளித்த அனைத்து கருத்துகளுக்கும் இங்கு உறுதிப்படுத்தப்படவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியதை ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். ஆனால், மாநில அரசுக்கு 10. 5 சதவீத திருத்தச் சட்டம் அடிப்படையில் தன்னிச்சையாக செயல்பட அனுமதி இருக்கு என்று தெரிவித்து அந்த உத்தரவை ரத்து செய்தனர். இரண்டாவதாக குடியரசு தலைவர் ஒப்பதல் பெற்றபிறகே இந்த சட்டத்தினை அமல்படுத்த முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்தது. அதையும் இங்கு ஒப்புக்கொள்ளவில்லை. 


உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் அந்த மாதிரியான ஒப்பதல் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தது. மூன்றாவதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு அதிகாரமில்லை என மதுரைகிளை சொல்லியதையும் ரத்து செய்து மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


கடைசியாக, நீதி அரசர் தணிகாசலம் அளித்த அறிக்கையின்படியே, உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமாற்றம் அளித்த தீர்ப்பில், ஜனாதர்னம் குழு கொடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தணிகாசலம் 10. 5 சதவீதம் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது இது பிரிவு 14 ஐ மீறியது என உச்சநீதிமன்றம் ரத்து செய்தது என தெரிவித்துள்ளார். 


அதேபோல், இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதுபடி, இதனால் பலன் அடைந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சலுகைகள் சட்டத்திற்கு உட்பட்டதே எனவும் தெரிவித்தார். 



முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25க்கு மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.


விசாரணைகளின் போது மனுதாரர்கள் தரப்பில், "சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில்,  68  சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில்,   வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. 


தமிழக அரசுத்தரப்பில்,  " ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் என்ற அளவில் 65,04,855 வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை.



மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக  கருத முடியாது. அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால்  10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரப்பட்டது.


இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பா.ம.க. தலைவர் மருத்துவர் எஸ். ராமதாஸ் தரப்பில், "வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது" என வாதிடப்பட்டது.


வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு,  மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? முறையான வரையறுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்றி இதுபோல உள் இட ஒதுக்கீட்டை வழங்கலாமா? அப்படி வழங்கினால் அது சட்ட விரோதமானதாகுமா? என்பது போன்ற 7 வினாக்களின் அடிப்படையில் வாதங்களை பகுப்பாய்ந்ததில், அரசு தனது சட்ட எல்லையை மீறி வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி,
வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.


தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம்  வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது,  சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.


அப்போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்கள் தரப்பில், இந்த தீர்ப்பால் தங்களது கல்வி பாதிக்கப்படும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண