ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை இனி நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வார் என, திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.


”சிரிக்க வைக்கும் அண்ணாமலை”


பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்துபட்டியல் தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பலரின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் வகையில் காலையில் ஒரு நாடகம் அரங்கேறியது.  எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்ததை போன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால், ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அவர் சொல்லவில்லை. அவர் கூறியதை பார்த்தால், 1972ம் ஆண்டில் ஆளுநரிடம் எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பதில் அளிப்பதற்கு முன்பாக, குற்றச்சாட்டுகளை பார்த்தேன், படித்தேன் ரசித்தேன் என கருணாநிதி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. அதோடு அண்ணாமலை சொல்லி இருப்பதை எல்லாம் கேட்கும்போது, சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கேட்கும்போதெல்லாம் சிரிப்பதை போன்று தான் சிரிக்க தோன்றுகிறது. அவருடைய அறியாமையை பார்த்து இப்படிபட்ட ஒருவர் எப்படி ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார், எப்படி இத்தனை நாட்கள் அவரை காவல்துறையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


”நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வார்”


அண்ணாமலையால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் என அனைவருக்கும் தெரியும். அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே தங்களது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளனர். அண்ணாமலைக்கு உண்மையை சொல்லி பழக்கம் இல்லை. குற்றச்சாட்டு எனக்கூறி யார் யாருக்கோ சொந்தமான சொத்துகளை எல்லாம் மொத்தமாக எழுதிக்கொடுத்து விட்டார். அதுவும் சொத்து விவரங்களை தான் சொல்லி இருக்கிறாரே தவிர, ஊழல் பட்டியலை வெளியிடவில்லை. யார் யார் மீது அண்ணாமலை குற்றம்சாட்டினாரோ அவர்கள் எல்லாம் அண்ணாமலை மீது சட்டநடவடிக்கை எடுப்பார்கள்.


தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளனவா?


இதனால், இனி அண்ணாமலை பாஜகவிற்காக சுற்றுப்பயணம் செய்வதை காட்டிலும், நீதிமன்றங்களுக்கு தான் அதிகம் சுற்றுப்பயணம் செய்வார் என நினைக்கிறேன்.இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எங்களுக்கு புதியது அல்ல. அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் யார் மீதேனும் தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா?. 


பொய்யில் தொடங்கிய பேட்டி:


அண்ணாமலை அளித்த பேட்டியே பொய்யில் தான் தொடங்கியுள்ளது. ரஃபேல் கைக்கடிகாரத்திற்காக அவர் காட்டியது பில்லே கிடையாது. அது வெறும் துண்டு சீட்டு தான். துண்டு சீட்டு என்பதும் பில் என்பது வேறு வேறு தான். அவர் சீட்டிங் அண்ணாமலை. மத்திய அரசிடம் தானே விசாரணை அமைப்புகள் உள்ளன. பின்பு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் கூட எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. அவர்களை காட்டிலும் அண்ணாமலை ஆளுமை மிக்க நபர் கிடையாது. 



15 நாட்கள் கெடு:


அதோடு 1400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகள் திமுகவிற்கு சொந்தமாக இருப்பதாக என அண்ணாமலை என குற்றம்சாட்டியுள்ளார், அதுதொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் எங்களிடம் சமர்பிக்க வேண்டும். அதானி விவகாரத்தை மறைக்கவே அண்ணாமலை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதோடு, ஆருத்ரா ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் அண்ணாமலை மற்றும் அவரது சகாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை மறைக்கவுமே அண்ணாமலை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.


”அண்ணாமலையை மாற்ற வேண்டாம்”


அண்ணாமலைக்கு மக்கு மலை என பொதுமக்கள் பெயர் சூட்டி உள்ளனர். அவர் இருந்தால் தான் திமுகவிற்கு நல்லது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரையில் அவரை மாற்ற வேண்டாம் எனவும், பாஜக தலைமைக்கு கோரிக்கை வைத்தார். அதோடு தேசிய தலைவராக உருவெடுத்துள்ள ஸ்டாலினின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி விடலாம் என்ற, அண்ணாமலையின் முயற்சி ஒருநாளும் ஈடேறாது” எனவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.