தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
பூதாகரமாக வெடித்த காவிரி பிரச்னை:
அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு:
இதனிடையே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசும், 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு, கர்நாடக அரசுக்கு ஆதரவாக உத்தரவுகளை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதாவது தமிழ்நாடு அரசு சார்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரியது நிராகரிக்கப்பட்டது. மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தற்போது திறக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது.
"காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் ராஜதந்திரம்"
வரும் 26ஆம் தேதி வரை காவிரி நதிநீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை பின்பற்ற கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், கர்நாடக அரசின் முடிவும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு தந்துள்ளது.
இந்த நிலையில், காவிரி விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராஜதந்திரத்துடன் கையாண்டு வருவதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "தமிழ்நாடு தவிக்கும் அதே நேரத்தில் காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை என்று கர்நாடகா வாதிடுகிறது.
டெல்டா விவசாயிகள் முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். மத்திய அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சரின் ஆதரவைப் பெறுவதுடன், இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க அனைத்து வழிகளையும் ஒருங்கிணைத்து, நமது முதலமைச்சர் ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்னையைக் கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டுக்கு உரிய நீர் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.