விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.  புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.


அப்போது அவர் திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 


வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று விக்கரவாண்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி இருந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


அவரது மறைவை ஒட்டி அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க மருத்துவமனைக்கு வருகை தந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் விசிக தரப்பில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாமக நிறுவனர், ராமதாஸ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.


இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நா.புகழேந்தியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விழுப்புரம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.