இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரத்தில் திறந்து வைத்தது தைலாபுரத்தில் தலைவலியை ஏற்படுத்தி விட்டது போல உள்ளது என்றும் இதனால் பாமக தலைவர் அன்புமணி புலம்பி தள்ளியிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திரன் கிண்டல் அடித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் எனச் சொல்லியிருக்கிறார் அன்புமணி. கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு, 1987-ல் வன்னியர்கள் நடத்திய போராட்டத்தைத் துப்பாக்கி முனையில் ஒடுக்கியது அன்றைய அ.தி.மு.க ஆட்சி. வன்னியர் சமுதாயத்திற்குப் பாடுபட்டு வரும் திமுக, 1989-இல் வன்னியச் சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது.
"அன்புமணியின் வடிகட்டிய பொய்"
தந்தை ராமதாஸோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணிக்கு வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன? என்பதெல்லாம் தெரியப் போவதில்லை. அதற்காக வரலாற்றை யாரும் மாற்றி எழுதி விட முடியாது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநராக முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியரை நியமித்தது திமுக அரசு.
வன்னியச் சமுதாயத் தலைவர் ராமசாமிக்கு சென்னை கிண்டியில் சிலை அமைத்தது கருணாநிதி அரசு. முதன் முதலில் வன்னியர் சமுகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனை மத்திய கேபினட் அமைச்சராக்கியது திமுக. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி காசி விஸ்வநாதனை நியமித்தது திமுக ஆட்சி.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ நியமிக்கப்பட்டார். வன்னியர் சொத்துக்களை பாதுகாக்க திமுக ஆட்சியில்தான். வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
மாநிலத் தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். இவை எல்லாவற்றையும் தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் எழுதி ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள் அன்புமணி. இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்தாண்டு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கண்டு கொள்ளவே இல்லை.
அப்போதெல்லாம் அன்புமணி எங்கே இருந்தார்? ஏன் வாய் திறக்கவில்லை? தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதி வெளிப்பட்டதே 2019-ல் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்தான். அந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தும் திமுக தோற்றது.
ஆனாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. அப்போது விக்கிரவாண்டியில் ஜெயித்த அதிமுகவிடம் அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடத் திராணி இல்லாமல் அவர்களிடம் மண்டியிட்டுக் கிடந்தது பாமக.
கிண்டல் அடித்த அமைச்சர்:
அந்த நேரத்தில் ராமதாஸ் என்ன சொன்னார் தெரியுமா? 'விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி தர்மத்தை மதித்து, அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அத்தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதுதான் பாமக பிரசாரத்தின் அடிப்படையாக இருந்தது' என்றார் ராமதாஸ்.
விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற பிறகு அன்றைய முதல்வர் பழனிசாமி வாக்குறுதியை நிறைவேற்றினாரா மணிமண்டபம் அமைத்தாரா? பழனிசாமி அரசுக்கு அன்றைக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த ராமதாஸும் அன்புமணியும் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? எனக் கேட்கத் திராணி இருந்ததா? விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் 'போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத்தான் மகுடம் சூட்டுவார்கள்.
நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால்தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் எனச் சொன்னார்.
2021 சட்டசபைத் தேர்தலில் தளபதி ஸ்டாலின் எனும் வீரனுக்குத்தான் மக்கள் மகுடம் சூட்டித் தீர்ப்பு வழங்கினார்கள். நயவஞ்சகன் யார்? என்பதையும் அடையாளம் காட்டினார்கள். "வன்னியர் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இருந்தது.
மருத்துவர் ராமதாஸ் எடுத்துக் கூறிய போது எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின" என வடிகட்டிய பொய்யை சொல்லியிருக்கிறார் அன்புமணி.
அன்புமணியின் தந்தை எழுதிய அதிமுக வரலாறான கழகத்தின் கதை புத்தகத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அதில் 19-வது அத்தியாயத்திற்கு ராமதாஸ் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? வன்னியர் எம்.ஜி.ஆருக்கு அந்நியர்!
அந்த அத்தியாயத்தில் ராமதாஸ் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா? 'இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான மாநாடுகள். போராட்டங்கள். பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்ட போதிலும், அதுகுறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட எம்.ஜி.ஆர் அரசு முன்வரவில்லை.
இதைக் கண்டிக்கும் வகையில் 15.03.1984 அன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அதன்பிறகும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசுக்கு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையின் நியாயம் புரியவில்லை.
1980-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சந்திக்கத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஆனால், அந்த நேரத்தில் ஒரு நடிகையின் கணவர் இறந்து விட்டதற்காக அண்டை மாநிலத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஒரு நடிகரின் தாயாரின் மணி விழாவில் கலந்து கொண்டார். ஒரு நடிகரின் திருமண விழாவில் பங்கேற்கவும். ஒரு நடிகரின் சொந்தப் படத்தைத் தொடங்கி வைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் தங்கைகள் திருமணத்தில் பங்கேற்பதற்காகக் கோவை செல்லவும் எம்.ஜி.ஆருக்கு நேரம் இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் சமூக நீதிக் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்க நேரம் இல்லை' என ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதையை படித்துவிட்டு பாமக குழப்பத்தின் கதை'யை அன்புமணி படிக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார்.