உதயநிதியை தலைவர் ஸ்டாலின் அமைச்சராக்கினால் எனக்கு சரிதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தேர்தலுக்கு முன்பே தீவிர பிரசாரம் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார். பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்த எய்ம்ஸ் செங்கல் விவகாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அனைவராலும் பேசப்பட்டது.
பிரசாரத்தில் பேசிய உதயநிதி, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டும் என்று பிரதமர் மோடி செங்கல் ஒன்றை நட்டு வைத்தார்.இப்போது வரை அந்த ஒரு செங்கல் மட்டுமே இருந்தது. அதனால் அதுமட்டும் எதற்கு என்று அந்த செங்கலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று ஒரு செங்கலை தூக்கி காண்பித்தார். அதுமட்டுமில்லாமல் அந்த செங்கலை எங்கு பிரசாரத்திற்கு சென்றாலும் எடுத்துக்கொண்டு சென்றார். இது அனைவராலும் ரசிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட தனது தொகுதியான திருவல்லிக்கேணிக்கு சென்று மக்களின் குரலுக்கு ஓடி ஓடி உதவி செய்து வருகிறார். அவர் தொகுதி மக்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை
இதையடுத்து தற்போது அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதை உதயநிதியோ, தொண்டர்களோ முன் வைக்கவில்லை. அவரது சொந்த கட்சி அமைச்சர்களுமே குரல் கொடுத்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் சமீபத்தில் இந்த கருத்தினை முன்வைத்தார். அதற்கு உண்மை சேர்க்கும் வகையில் கட்சியில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்” என்று கூறினார். அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவிஏற்கும் போது, பதவியேற்பு விழாவில் அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் அதனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இதேபோல் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி “முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திமுகவின் வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர். உதயநிதி அனைவரும் பாராட்டும் அளவில் செயல்பட்டு வருகிறார். வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வரவேண்டும். தமிழகம் முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அமைச்சர் கே.என்.நேரு உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்த அமைச்சர் கே.என்.நேருவிடம் உதயநிதி அமைச்சராகிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “இருக்கலாம். யாரை அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வர் முடிவெடுப்பார். தன்னுடைய அமைச்சரவையில் யாரை அமைச்சராக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்களோ அவரை வைத்துக்கொள்வார். அதில் என்ன பிரச்னை. உதயநிதி அமைச்சராக வேண்டும் என அன்பில் மகேஷ் கேட்பது அவருடைய உரிமை. அவர் அவருடைய நண்பரும் கூட. தலைவர் எது செய்தாலும் எனக்கு சரி. கோளாறான ஆட்களெல்லாம் அமைச்சராக இருக்கின்றனர். உதயநிதி நன்றாக அமைச்சர் பதவியை கையாள்வார்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.