சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, நிறுத்தப்பட்டதால், 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.


ஏர் இந்தியா விமானத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு குறித்து, டெல்லியில் உள்ள டி.ஜி.சி. ஏ, (director general of civil aviation) முழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, டெல்லிக்கு 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் மொத்தம், 172 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். 


ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர் 


விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டு, விமானத்துக்குள் ஏசிகள் இயங்காமல், பயணிகள் வெப்பத்தில் தவித்தனர். இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால், பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை, சென்னை விமான நிலைய ஓடுபாதையில் நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, அவசரமாக தகவல் கொடுத்தார். இதை அடுத்து இழுவை வண்டிகள் விரைந்து வந்து, ஓடுபாதையில் பழுதடைந்து நின்ற விமானத்தை இழுத்துக் கொண்டு வந்து, விமானம் நிற்கும் இடத்தில் நிறுத்தப்பட்டது. 


இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. 


வாக்குவாதம்


ஆனால் பகல் 12:00 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யாததால், மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிலையத்தின் உள் பகுதியில், அதிகாரிகள் ஊழியர்கள் இடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதை அடுத்து பயணிகளை சமாதானம் செய்த, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள், பயணிகளுக்கு உணவு ஏற்பாடுகளை செய்தனர். 


ஆனால் மாலை 5 மணிக்கும், விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்படாததால், இன்று இரவு 8 மணிக்கு, விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள், தங்களுடைய டிக்கெட்களை, வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொண்டு பயணிக்கலாம். இல்லை என்றால் பயணங்களை ரத்து செய்தால், முழு கட்டணமும் திருப்பிக் கொடுக்கப்படும். அதுவும் இல்லை என்றால், தங்களுடைய பயண டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு, ஏர் இந்தியா விமானத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தனர். 


இதை அடுத்து பயணிகள் பலர் தங்களுடைய பயணிகள் டிக்கெட்டுகளை, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் வேறு விமானங்கள் போன்றவைகளுக்கு மாற்றினர். ஒரு சில பயணிகள் தங்களுடைய டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, திரும்பிச் சென்றனர். இப்போது சுமார் 40 பயணிகள் மட்டும், இரவு 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குள், காத்திருக்கின்றனர். 


நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்


இதனால் தற்போதைய நிலவரப்படி காலை 10 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 10 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 8 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமானத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தபினர். 


இதற்கு இடையே இந்த சம்பவம் குறித்து, டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.