திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப் போர்த் தியாகிகள் நாள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற கொள்கை முழக்கத்தோடு தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீந்தமிழுக்காக ஒப்படைத்த தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
உங்கள் உயிரால் தமிழ் உயிர் பெற்றது. உங்கள் உணர்வால் நாங்கள் உணர்ச்சி பெற்றோம்! உங்கள் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்தது. நீங்கள் மூட்டிய தீ, இன்னும் எரிந்துகொண்டு இருக்கிறது. மொழிப்போர்த் தியாகிகளே! உங்கள் தியாகம்தான் எங்களை இன்றுவரை விழிப்போடு வைத்திருக்கிறது. உங்களுக்கு மீண்டும் நான் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணிச் செயலாளர் - மூன்றாம் தலைமுறையாகக் கழகத்துக்காக உழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அருமைத் தம்பி சகோதரர் எழிலரசன் எம்.எல்.ஏ.அவர்களே!
மாணவரணியின் பல்வேறு பொறுப்புகளைச் சேர்ந்த அடலேறுகளே! அமைச்சர் பெருமக்களே! சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களே! முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
எத்தனையோ விழாக்கள் - நினைவு நாட்கள் வந்து போகிறது. ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும். 'தியாகத்துக்காக' - அதுவும் தமிழுக்கான தியாகத்துக்கான நிகழ்ச்சி ஒன்று உண்டென்றால், அதுதான் இந்த சனவரி 25! மொழிப்போர்த் தியாகிகள் நாளாகும்!
உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. எந்த மொழிக்காகவேனும், அந்த மொழியைக் காப்பாற்றுவதற்காக - அந்த மொழியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உடலில் தானே தீ வைத்து, தங்களைத் தாங்களே உயிர்த் தியாகம் செய்தது உண்டா? தாய்த்தமிழைக் காப்பதற்காக மட்டும்தான் இத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன.
“ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே!” - என்று தனது கால்சட்டைப் பருவத்தில் புலி - வில் - கயல் கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் புறப்பட்டவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். இதுபோன்ற எத்தனையோ தமிழ் இளைஞர்களை, தமிழைக் காப்பாற்றுவதற்காகத் தட்டி எழுப்பினார் தந்தை பெரியார் அவர்கள்.
1938-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் இந்த 2022-ஆம் ஆண்டு வரைக்கும் தணியாமல் இருக்கிறது. அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு, ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. பெரியாரின் குரலுக்கு சோமசுந்தர பாரதியாரைப் போன்ற தமிழறிஞர்கள் அணிதிரண்டார்கள். மறைமலையடிகளைப் போன்ற சமய நம்பிக்கையாளர்களும் அணிதிரண்டார்கள். பேரறிஞர் அண்ணாவைப் போன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்தார்கள். முத்தமிழறிஞர் கலைஞரைப் போன்ற பள்ளி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அதிகப்படியான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம்தான் 1938 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம்!
அவர்களைக் கைது செய்தபோது தங்களது கைக்குழந்தைகளோடு பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். இப்படிப் பெண்களையும் தமிழுக்காகப் போராடத் தூண்டினார் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
குடும்பம் குடும்பமாக கைதாகிச் சிறையில் இருந்தார்கள். 'இருப்பது ஓர் உயிர், அது போகப் போவது ஒரு முறை, அது நல்ல காரியத்துக்காக நாட்டுக்காகப் போகட்டுமே' என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராசன். அதன்பிறகு உயிர் துறந்தார் தாளமுத்து. அந்த இரண்டு தியாகிகள் நினைவாக தாளமுத்து - நடராசன் என்ற பெயரில் மாபெரும் மாளிகையை எழும்பூரில் அமைத்ததுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.
1938-இல் தொடங்கிய போராட்டம் - 1940-ஆம் ஆண்டு இந்தி கட்டாயமில்லை என்று அறிவிக்கும் வரைக்கும் நடந்தது. 1948-ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும் அண்ணாவும் போர்ப்பரணி பாடினார்கள். இரண்டாண்டு காலம் அந்தப் போராட்டம் நடந்தது.
1963-ஆம் ஆண்டு மீண்டும் இந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் அமைத்த மொழிப்போர்க் களம் என்பது இரண்டாண்டு காலம் தமிழகத்தில் நீடித்தது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தொண்டர்களும் பங்கெடுத்துச் சிறை சென்றார்கள். ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுகள்வரை நம்முடைய கழகத் தொண்டர்கள் சிறையில் இருந்தார்கள்.
மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான தி.மு.க.வினர் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றனர். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றனர். மற்ற மாவட்டங்களில் மூன்று மாதம் முதல் ஆறு வாரம்வரை தண்டனை பெற்றனர். தி.மு.க.வின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதுதான் தமிழ்நாட்டின் மொழிப்போராட்டத்தின் வரலாறு!
இந்த இரண்டாண்டுகால எழுச்சிதான் 1965-ஆம் ஆண்டு மாணவச் சமுதாயத்தை மாபெரும் கிளர்ச்சிக்குத் தயார் ஆக்கியது. தங்களது உடலில் தாங்களே தீவைத்து
* கீழப்பழுவூர் சின்னச்சாமி,
* கோடம்பாக்கம் சிவலிங்கம்,
* விருகம்பாக்கம் அரங்கநாதன்,
* ஆசிரியர் வீரப்பன்,
* கீரனூர் முத்து,
* சாரங்கபாணி போன்றோரும் -
அமுதம் அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - மொழிக்காகத் தங்கள் உயிரைத் தந்தார்கள்.
இன்றைக்கும் படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள்!
மொழிப் போர்க்களத்தின் தீக்கிரையாக்கிக் கொண்ட முதல் தியாகி, கீழப்பழுவூர் சின்னச்சாமி! இவர் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். தனது மகளுக்கு 'திராவிடச் செல்வி' என்றுதான் பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி!
சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் என்ற 21 வயது இளைஞரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளர்!
தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் ஒன்றிய அரசின் தொலைபேசித் துறை ஊழியர். அவரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்.
சத்தியமங்கலம் முத்து என்ற தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு 22 வயது!
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். தி.மு.க.வைச் சார்ந்தவர் இவர்!
* 22 வயதே ஆன விராலிமலை சண்முகம். தி.மு.க. தொண்டர்.
திருச்சி பாலக்கரையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக 'சின்னச்சாமி - சண்முகம் பாலம்' எனப் பெயர் சூட்டினார் தமிழினத் தலைவர் கலைஞர்.
சென்னையில் அரங்கநாதன், சிவலிங்கம் பேரால் சுரங்கப்பாதை, பாலம் அமைக்கப்பட்டது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். எழும்பூரில் தாளமுத்து - நடராசன் மாளிகை அமைத்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்!
இத்தகைய தியாகத்தின் திருவுருவங்களால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் தமிழியக்கம், தமிழின இயக்கம் எழுந்து நிற்கிறது. அதனால்தான் 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அத்தகைய உணர்வோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நடத்தினார்கள்.
மாணவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கையைச் சட்டம் ஆக்கினார் பேரறிஞர் அண்ணா!
நாம் வாழும் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டினார்கள். அவரது வழியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழாட்சி நடத்தினார்கள்.
* நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்குப் பெற்றுத் தந்தது!
* 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது!
* ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற சொற்களுக்குப் பதிலாக திரு, திருமதி சொற்களைச் சட்டப்பூர்வம் ஆக்கியது!
* தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!
* திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!
* 'தமிழ் வாழ்க!' என எழுத வைத்தது!
* சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது!
* தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!
* ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது!
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது!
* தமிழைக் கணினி மொழி ஆக்கியது!
* தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!
* பிற ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது!
* உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது!
* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!
* திராவிடப் பல்கலைக்கழகத்துக்கு நிதி வழங்கியது!
* தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது; அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்தது!
* தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999-இல் நடத்தியது!
* ஓலைச் சுவடி மொழியை அச்சு மொழியாகவும் ஆக்க அடித்தளம் அமைத்தது! - என இதெல்லாம் செய்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு!
* செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைத்துத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அத்தகைய தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு! அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வருகிறது.
கடந்த ஆறு மாதகாலத்தில் தமிழுக்காகவும் தமிழினத்தின் மேன்மைக்காகவும் எத்தனையோ திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திக் கொடுத்திருக்கிறது.
* அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
* வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்க்கு முன்னுரிமை
* தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்க்கு தகைசால் தமிழர் விருது
* மதுரையில் 114 கோடி ரூபாயில் கலைஞர் நினைவு நூலகம்
* உயரிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்
* மதுரை இளங்குமரனார், கி. ராஜநாராயணன் ஆகியோர் மறைவுக்கு அரசு மரியாதை.
* பேராசிரியர், நாவலர் ஆகியோர் நூல்கள் நாட்டுடைமை
* சிலம்பொலி செல்லப்பனார், மதுரை இளங்குமரனார், முருகேச பாகவதர், தொ. பரமசிவன், புலவர் செ.ராசு, கோவில்பட்டி பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் ஆகியோர் நூல்கள் நாட்டுடைமை.
* திருக்கோவில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு
* ஜெர்மன் நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையானது தொய்வின்றி இயங்க 1 கோடியே 25 லட்ச ரூபாய் நிதி.
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
* மாமன்னன் ராசராசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
* தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலக்கிய மாமணி விருது.
* தமிழ் - திராவிடச் சிந்தனையின் பிதாமகர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.
* தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாள்
* முகாம் வாழ் இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* கல்லூரி பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு
* பட்டப்படிப்புகளைத் தமிழ்வழியில் அறிமுகம் செய்தல்
* வ.உ.சிதம்பரனாருக்கு 150-ஆவது பிறந்தநாள் விழாக்கள்
* மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாக்கள்
*அறிஞர் மு.வரதராசனாருக்கு இராணிப்பேட்டையில் சிலை
* குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது
* சிறந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்
* இளந்தளிர் இலக்கியத் திட்டம் தொடக்கம்
* செந்நாப்புலவர் கார்மேகனார் பெயரால் புதிய நூலகக் கட்டடம்
* சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் செங்கோல் விருது
- இவை அனைத்துக்கும் மேலாக உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடியின் வரலாற்றை உலகம் பறைசாற்றும் ஆதாரங்களைத் திரட்ட தமிழகத்தின் பழம்பெரும் இடங்களில் அகழாய்வு பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' நாம் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் உலகம் ஒப்புக் கொள்ளும் தன்மையுடன் செயல்படுத்திக்காட்ட திட்டமிட்டுள்ளோம். இதுதான் தமிழின் ஆட்சி என்பது! இதுதான் தமிழினத்தின் ஆட்சி என்பது! இதுதான் தந்தை பெரியாரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், விரும்பிய ஆட்சி! நமக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனைச் செய்தாலும் - ஒன்றிய அரசிடமும் தமிழுக்காகப் போராடியும் வாதாடியும் கோரிக்கை வைத்தும் வருகிறோம்.
* மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக ஆக்கத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றும் போராடி வருகிறோம்.
* இந்திய அரசு அலுவலகங்களில் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என்று வாதாடி வருகிறோம்.
* வழக்காடு மொழியாக தமிழ் வலம் வரவேண்டும் என்று முழங்கி வருகிறோம்.
இவை அனைத்தும்தான் நாம் யார் என்பதற்கான அடையாளங்கள்!
தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல.
நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழியை அல்ல, இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம். தமிழ் மொழிப்பற்றாளர்களே தவிர - எந்த மொழி மீதான வெறுப்பாளர்களும் அல்ல நாம். ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவர்களது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை தூண்டும் வகையில் திணிப்பாக மாறக் கூடாது. ஆனால் இந்தியைத் திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக்கத்தின் குறியீடாகவே திணிக்கிறார்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல - ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும் - அது இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக இந்தி பேசும் மக்களை அனைத்துத் துறைகளிலும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியைத் திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவனின் தாய்மொழியின் இடத்தை பறித்து - அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் பார்க்கிறார்கள். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.
அவர்களுக்கு, தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது. சனவரி 26-ஆம் நாள் - அதாவது நாளை குடியரசு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டுக்கு மிக முக்கியமான இரண்டு நாட்கள் - ஒன்று - ஆகஸ்ட் 15 - சுதந்திர நாள்! மற்றொன்று - சனவரி 26 - குடியரசு நாள்!
அந்தக் குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்குத் திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.
வீரமங்கை வேலுநாச்சியாரை - மானம் காத்த மருது பாண்டியரை - மகாகவி பாரதியாரை - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. அவர்கள் சொல்லும் சிப்பாய்க் கலகத்துக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக - 1806-ஆம் ஆண்டே வேலூரில் புரட்சி நடந்து விட்டது.
அதற்கும் முன்னால்,
* நெற்கட்டுஞ்செவலில் பூலித்தேவன்
* சிவகங்கையில் வேலுநாச்சியார்
* பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன்
* மருது சகோதரர்கள்
* இராமநாதபுரத்தில் மயிலப்பன்
* கான்சாகிப் மருதநாயகம்
* தளபதி சுந்தரலிங்கம்
* தீரன் சின்னமலை
* அழகுமுத்துகோன்
* சிவகிரியில் மாப்பிள்ளை வன்னியன்
* பழனியில் கோபால் நாயக்கர் - இப்படிப் பலரும் போராடிய மண் இந்த தமிழ்நாடு.
வேலுநாச்சியார் யார்? கட்டபொம்மன் - மருதுபாண்டியர் யார்? வ.உ.சிதம்பரனார் யார் என்று கேட்பவர்களே! நீங்கள் முதலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதிய வரலாறுகளை படியுங்கள்! பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பிரகடனம் எழுதி கோவில் சுவரில் ஒட்டி வைத்த மாவீரன் மருதுபாண்டியன்.
'பேரரசர்களுக்கு பணியாளரும் - இழிபிறப்பான பரங்கியருக்கு பரம எதிரியுமான மருதுபாண்டியர்' என்று கையெழுத்துப் போட்டு வைத்தவன் மருது பாண்டியன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்குமேடைக்குச் சென்றபோது அஞ்சா நெஞ்சத்துடன் சென்றதாகவும், தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்ததாகவும், போரில் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதாகவும் பிரிட்டிஷ் அதிகாரி பானர்மேன் எழுதி இருக்கிறார்.
'வ.உ.சிதம்பரனாரின் பேச்சைக் கேட்டால் பிணம் கூட எழும்' என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதி வைத்துள்ளார்கள். இவர் சாதாரண ஆள் அல்ல, பயங்கரமானவர் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி எழுதி இருக்கிறார்.
அத்தகைய சிதம்பரனாரை, 'கப்பலோட்டிய தொழிலதிபர்தானே' என்று ஒரு டெல்லி அதிகாரி கேட்டதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாருக்கு எதிராகக் கப்பல் ஓட்டினார்? பிரிட்டிஷாருக்கு எதிராகத்தானே? அரசியல்ரீதியாக மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் பிரிட்டிஷ் அரசை பலவீனப்படுத்த முயன்ற முதல் சுதேசி அல்லவா சிதம்பரனார்? இந்தப் புரிதல் கூட இல்லாதவர்கள் தமிழ்நாட்டை, தமிழை, தமிழர்களின் உணர்வை எப்படி புரிந்துகொள்வார்கள்?
1938-ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட காலம் முதல் - 2022-ஆம் ஆண்டு குடியரசு நாள் விழா வரையில் அவர்களுக்குத் தமிழ்நாட்டைப் புரியவில்லை என்றுதான் சொல்ல முடியும்.
'இந்தியை பெரியார் ஈ.வெ.ராவும் சோமசுந்தரபாரதியும் என இரண்டு பேர்தான் எதிர்க்கிறார்கள்' என்று சட்டமன்றத்தில் சொன்னார் அன்றைய முதல்வர் இராஜாஜி அவர்கள். 'எதிர்ப்பவர்களாவது இரண்டு பேர், ஆதரிப்பது நீங்கள் ஒருவர்தானே' என்று உடனேயே திருப்பிக் கேட்டார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.
அத்தகைய இராஜாஜி அவர்களே இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ஆம் ஆண்டு பேசியாக வேண்டியது இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜாஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என்றால் இன்றைய பா.ஜ.க.வினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!
'நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன். அப்படிச் சொல்வதால் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்திக்கோ விரோதி அல்ல' என்றார் பேரறிஞர் அண்ணா. அதுவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் சொன்னார். இன்னமும் நாம் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நாம் நமது தமிழினத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர்கள். தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் - தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் - அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள். நாம் அரசியல் இயக்கமாகச் செயல்படுவதும் - தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதும் - இத்தகைய நோக்கங்களுக்காகத்தான்! நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவோ - சிலர் அமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காகவோ அல்ல! திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கும் காலம் என்பது - அன்னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும்!
அனைத்துத் தமிழர்களும் மேன்மையுறும் காலமாக அமைய வேண்டும்! எந்த நோக்கத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதோ - அந்த நோக்கத்திலிருந்து இம்மியளவும் மாறாமல் கழகம் செயல்படும்! கழகத் தோழர்களும் - தொண்டர்களும் செயல்பட வேண்டும்! அதிலும் குறிப்பாக, கழக மாணவரணியினரும் – இளைஞரணியினரும் நம்முடைய இயக்கத்தின் வரலாற்றை - கொள்கைகளை - கோட்பாடுகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; அறிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வெறும் கட்சிக்காரர்கள் அல்ல, கொள்கைவாதிகள் - இலட்சியவாதிகள் என்பதை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்! எத்தகைய போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இந்தளவு வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் உங்களை முழுமையான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக உருவாக்கிக் கொள்ள முடியும்! அனைவருக்குள்ளும் ஓடுவது சிவப்பு ரத்தமாக இருக்கலாம்- நமக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு வகை ரத்தம் என்பதை மறந்து விடாதீர்கள்! இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு இருக்கும்வரை இந்த இயக்கத்தையும் தமிழினத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது!
''சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே? வீரர் பாண்டியர் அரசு ஏன் கவிழ்ந்தது? சோழர் உலவிய சோர்விலா நாட்டில் கோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம்?' - என்று கவிதையால் கனல் கக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதனை மாற்றி, "சேரர் வாழ்ந்த சிறப்பிடம் இதுதான்! வீரர் பாண்டியர் வாழ்ந்த நாடும் இதுதான்! சோழர் உலவிய சோர்விலா நாடும் இதுதான்!" என்று காட்டும் பணியை அரசியல்ரீதியாகவும், ஆட்சியின் வழியாகவும் உருவாக்கிக்காட்ட நித்தமும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்த உழைப்பை, சாதனைகளைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக கழகத்தின் மாணவரணி செயல்பட வேண்டும். எதிர்காலத் தலைமுறையான மாணவச் சமுதாயத்துக்கு ஏற்றமிகு வாழ்வை அமைத்துத் தரும் பெரும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளும் கடமை மாணவச் சமுதாயத்துக்கு இருக்கிறது. நன்றாகப் படியுங்கள். அனைத்துப் பணிகளுக்கும் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை உருவாக்கி வளர்த்த பெற்றோரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுங்கள்.
தாய்மொழியாம் தமிழை - பிறந்த தாய்நாட்டை காக்க உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மாணவச் சமுதாயத்தின் அனைத்துத் தம்பிமார்களையும் தங்கையரையும் உங்கள் அண்ணனாக அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்