மதுரை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்" என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அரசியல் வாரிசு என்றால் புரிந்துகொள்ள வேண்டும். சீட் கொடுப்பது அல்ல. தலைமைப் பொறுப்பு. திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அதன்பின் ஸ்டாலின் இருக்கிறார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வர முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேரேட் கம்பெனி. அதிமுகவில் என்னைப்போல் சாதாரண தொண்டனும் உயர் நிலைக்கு வர முடியும். அது அதிமுகவில் மட்டும்தான் முடியும்” என்றார்
அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இணைந்து சின்னத்தை முடக்கப்போவதாக பரவலாக பேச்சு இருக்கு இதை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, ”நீதிமன்றத்தில் எல்லா தீர்ப்பும் வந்தாச்சு, தேர்தல் ஆணையமும் கொடுத்தாச்சு, இனிமே எப்படி முடக்குவார்கள்? அவங்க ஆசை நிறைவேறாது நிராசையா தான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் இனி முடக்க முடியாது” என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது. தேதி அறிவித்த பின் அதிமுக கூட்டணி இறுதி ஆகும். அதிமுகவை சேர்ந்த ஏ.வி. ராஜூ நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அவரு ஒரு பெரிய ஆளு இல்லை. அவரு தீபா கட்சிக்கு போய் வந்தவர். அவரை இரக்கப்பட்டு சேர்த்தோம். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது அதனால் அவரை விட்டு வைத்திருந்தோம். இப்போ அவரு கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்த 3 ஆண்டு காலத்தில் இந்த ஆட்சி மீது கடுமையான வெறுப்பு. மக்கள் கொதித்து போய் உள்ளார்கள். விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டுவரி உயர்வு, அதே போல் எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் நான்கள் தேர்தலை சந்திக்கின்றோம் ஆகவே எங்கள் கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெரும். திமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஆண்டாவனால கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்.