சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். சமீபகாலமாக நாட்டில் நாய் கடி தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்காக மடி கணினியுடன் கூடிய LCD Projector வழங்குவது:


பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையங்கள் (UCHC), நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் சுகாதார / நல வாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாய் சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா  நோய்கள் சிகிச்சை மற்றும் ஆய்வக நடைமுறைகள் போன்ற  பணிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. பயிற்சி அளிக்க  வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இப்பயிற்சியை மண்டல அளவிலேயே அளிக்கலாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதார துறையின் கீழ் வரும் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் (UCHC), மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் சுகாதார & நல வாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு, மருத்துவம் சார்ந்த பயிற்சி அளிக்க 15 மருத்துவ மண்டலங்களுக்கும் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மடி கணினியுடன் கூடிய LCD Projector வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக கூடுதலாக தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பது:


சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக 1,2,3,4,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 9 எண்ணிக்கையிலான மண்டலங்களுக்கு, தலா 5 பேர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள். இதற்காக வருடத்திற்கு ரூ.1.16 கோடி என்ற வீதத்தில் தொடர் செலவினமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்தல்:


பெருநகர சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொது மக்களை அச்சுறுத்துவது மற்றும் கடிப்பதால் ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது, எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதன் மூலம் நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்களின் நலன் காக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.70.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதியதாக 2 நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் நிறுவப்படுதல்:


பெருநகர சென்னை மாநகராட்சியில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி தோராய மதிப்பீட்டில் துவக்கப்படும்.


கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு Vehicle Mounted Power Sprayer-வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்வது:


கால்வாய்களில் உருவாகும் கொசுப்புழுகளை அழிப்பதற்கு கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு ரூ.80,000 வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் Vehicle Mounted Power Sprayer- வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்து வழங்கப்படும்.