கரூரில் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும்  பந்தல் அமைக்கும் பணிக்கான  கால் கோல்  நடும் நிகழ்ச்சியை  மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

 

 

அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு  76வது  முப்பெரும் விழா கரூரில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

 

இவ்விழாவில், பல்வேறு விருதுகளை விருதாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதன்படி , பெரியார் விருது  திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. , அண்ணா விருது பாளைங்கோட்டை சுப சீதாராமனுக்கும், கலைஞர் விருது அண்ணா நகர் முன்னாள் எம்எல்ஏ சோம ராமச்சந்திரனுக்கும்,  பாவேந்தர் விருது மறைந்த குளித்தலை சிவராமனுக்கும் பேராசிரியர் விருது காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கத்திற்கும் மு.க.ஸ்டாலின் விருது கோவை முன்னாள் மாவட்ட செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான,  பொங்கலூர் பழனிச்சாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நிகழ்ச்சிக்காக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பிரிவு சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகாக அமைக்கப்பட உள்ள மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான,  கால்கோள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  

 

 

மாவட்ட கழக செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான வி செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமி சுந்தரி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், மேயர் கவிதா துணை மேயர்,  தாரணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.