பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணிய சுவாமி டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில காலங்களாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், தர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் " சில முட்டாள்கள் சுப்பிரமணிய சுவாமிஜி குறித்து வேடிக்கையான டுவிட்களை அனுப்புகிறார்கள். அவரை பின்தொடர்பவர்கள் மதுரையில் அதிகளவில் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு அவரது 80வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரசாதம் வழங்கப்பட்டது" என்று அவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.






அவரது டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, என்னை விமர்சிக்கும் அனைத்து முட்டாள்களும் தி.க. கூட்டத்தின் பின்னடைவிற்கு சொந்தமானவர்கள். அவர்களை புறக்கணியுங்கள். ஜனவரி 31, 1999ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதை நான் மேற்பார்வையிட்டபோது அவர்கள் நடுங்கியதை கண்டுள்ளேன். அவர்கள் மீண்டும் நடுங்குவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.






தன்னுடைய இந்த பதிவு மூலம் சுப்பிரமணிய சுவாமி தி.மு.க. ஆட்சி மீண்டும் கலைக்கப்படும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு கூறியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்தும் பதிவுகளை இட்டு வருகின்றனர். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.