சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். 


 



ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடை அணிந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையின் பிரபல பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் மீது மேலும் இரண்டு பாலியல் புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மேலும் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார். 



‛‛ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு வழக்குகளில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில்(மகரிஷி வித்யா மந்திர்) இது போன்ற பாலியல் புகார்களை மாணவிகள் அளித்துள்ளதாகவும், அந்த பள்ளியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும்  விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக,’’ கூறினார். ‛‛ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்னா’’ சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலிறுத்தியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தால், நேரடியாக நடக்கும் வகுப்பில் எந்த அளவிற்கு தவறுகள் நடைபெறும் என்பதையும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் பல பெற்றோர் கவலை தெரிவித்துள்ளன். ராஜகோபாலனின் குற்றச்சாட்டுகள் மீது மேலும் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் மீது மேலும் குவியும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இது இன்று, நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வரும் பயங்கரம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 


பலர் துணிந்து வந்து புகார் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர், புகார் அளிக்க மனமிருந்தும் புகார் அளித்தார் பெயர் கெட்டுவிடுமோ என்று அச்சம் அடைகின்றனர். எனவே பள்ளிகளில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வசதியாக, தனிக்குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் , மகளிர் ஆணைய பிரதிநிதிகள் ஆகியோர் அதில் இடம் பெற வேண்டும்.