10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு என்று டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட்டபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்பு மன்னார்குடியில் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், “முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 68,652 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தததும் தூர்வாரப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் திறந்து விடப்பட்டது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணிக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் முறையாக பணிகள் நடக்கவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரியதாக கணக்கு மட்டுமே காட்டப்பட்டுள்ளது ” என்றார்.
தொடர்ந்து அளித்த பேட்டியில், “பருவமழைக்கு முன்பே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டன. சென்னையில் 44 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1,545 மருத்துவ முகாம்கள் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த மழை, வெள்ளத்தின்போது சிலர் அரசியல் லாபத்திற்காக விமர்சனம் செய்தனர். பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க நிரந்தர தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது. சென்னை பெருநகர வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஐஐடி நிபுணர்களும் இடம்பெறுவார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரண நிதி வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளோம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர்காப்பீடு தொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளோம்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்