தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்  நிறைவடைய உள்ளது. 


இந்நிலையில், திமுக தலைமைக்கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்,ஆசிரியர், மாணவர்,மகளிர்,கழனியில் பாடுபடும் உழவர்,ஆலையில் உழைக்கும் தொழிலாளி,மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்.


அந்த வகையில் தமிழ்நாட்டில்உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்"  நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஓயாத உழைப்பின் ஓராண்டு என்ற தலைப்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்  நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இந்த கூட்டங்கள் நடைபெற்றது. 


இதில் இதில் ஆத்தூர் (சேலம்) தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் மகளிருக்கான இலவச பேருந்து பயணம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000ன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அடுத்ததாக மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம், கிண்டியில் உள்ள கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு, மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு ஆகியவை பயன்பாட்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.