உழைப்பவர்களுக்கு மட்டுமே திமுகவில் இடம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவார்கள் என்று  10 மாவட்ட செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கான பணிகளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிக்கான திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் காணொலி மூலம் பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ;-


வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க இருப்பதால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.திமுகவின் தேர்தல் அறிக்கைகள் வாக்குறுதிகளை அண்டை மாநிலத்திலும் பின்பற்றும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசி உள்ளார்.


மேலும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு, உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.சுணக்கமாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அனைவருக்கும் ஒரே சமயத்தில் பதவிகளும் பொறுப்புகளும் கிடைப்பதில்லை. உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சராக விரும்புவவதில்  தவறில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதையே நினைத்து  ஏங்கிப் போக வேண்டியதில்ல. கழகத் தொண்டர்கள் பலருக்கும் சட்டமன்ற உறுப்பினராவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியதில்லை என்று அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. 
 
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் ஒவ்வொரு பதவி, பொறுப்பிலும் இதுதான் சூழல். சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வரும். மற்றவர்கள் காத்திருப்பார்கள். அதேசமயம் உழைத்துக் கொண்டேயிருப்பார்கள். உழைப்பவர்களுக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.