சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த நிரஞ்சனா என்பவர் உள்ளார். இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் பகுதியிலுள்ள ஜேபி கோவில் தெருவில் சக ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்று ஜெகதீசன் பேசிக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்னை வண்ணாரப்பேட்டை காவலர்கள் மணிவண்ணன், தியாகராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் கூட்டத்தைப் பார்த்த உடன், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். 



அப்போது திடீரென கோபமடைந்து ஜெகதீசனும் உடன் இருந்தவர்களும் தகாத வார்த்தைகளால் காவலர்களை திட்டத் தொடங்கினர். ’நீங்க யாரு?, எதற்காக இங்கு நிற்கிறீர்கள்?’ என்று காவல் துறையினர் கேட்டதற்கு, ’நாங்க ரவுண்ட்ஸ்ல இருக்கோம்’ என்று ஜெகதீசன் உடனிருந்த ஒருவர் கூறியுள்ளார். ’யாரு கவுன்சிலர்?’ என்று காவல் துறையினர் கேட்ட போது, ’நான் தான் கவுன்சிலர்’ என்றும் ஜெகதீசன் கூறினார். அவருடன் வந்த ஆதரவாளர்கள் சிலர், ’நாங்க என்ன ரவுடிகளா?’ என்று கூறி காவல் துறையினரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த காட்சிகளை காவல் துறையினர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அப்போது ’வா, அடி வா... வீடியோ எடுத்து என்னா பண்ணப் போறான்’ என்று ஜெகதீசன் கேட்டுள்ளார். கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் காவல் துறையினரை மிரட்டுவது, ஆபாசமாக திட்டுவது வீடியோவில் பதிவானது. இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் தியாகராஜன் இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவலர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் பெயர் தெரியாத 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 141- சட்டவிரோதமாக கூடுதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- வன்முறை செயலால் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே திமுகவில் இருந்து ஜெகதீசன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண