கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதைக்கண்ட விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியரை மிரட்டியதாக கூறப்படுகிறது.



நல்ஒழுக்கம் பற்றி சுட்டிகாட்டிய ஆசிரியரை சினிமா பாணியில் நண்பர்களை அழைத்து வந்து மிரட்டிய சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து ஆசிரியகளும் தோகைமலை காவல்நிலையத்தில் மாணவர் மற்றும் அவருடன் வந்த 4 இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியரை மிரட்டிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சக ஆசிரியர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி அந்த பள்ளி மாணவருக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கவுன்சிலிங் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த ஒரு முறை திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனால், மாணவர் மீது புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், மாணவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உடன் வந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மாணவரின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்த சக ஆசிரியர்கள் பாதுகாப்பு கோரி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர் செயல்பாடு குறித்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலையில் மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் குரு . குரு என்றால் ஆசிரியர் பெருமக்கள் என்று கூறிவரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை மிரட்டும் சம்பவம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்றைய சமுதாயத்தை வழி நலத்தை அனைத்து பள்ளிகளிலும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனவும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதுபோல் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டி வருகிறார்களா என கண்காணிக்க தனி குழுவை அமைத்து விட வேண்டும் என மாவட்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.