புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒரு வார்டில் மட்டும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வாக்குப்பதிவு நடந்த 50 வார்டுகளில் 33 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி உள்ளன. இந்த நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜ் என்பவரும் துணை மேயர் வேட்பாளராக காங்கிரஸை சேர்ந்த குமரகுருநாதனும் அறிவிக்கப்பட்டனர். 


 



திமுக இளைஞரணி செயலாளருடன் சோபன்குமார்


 


இந்த நிலையில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள சோபன்குமார் என்பவர் 8ஆவது வார்டில் போட்டிட்டு வென்ற தனது மனைவி சூர்யா சோபன்குமாரை போட்டி மேயர் வேட்பாளராக கட்சித் தலைமைக்கு எதிராக களமிறக்கினார்.



திமுக கவுன்சிலர் சூர்யா சோபன் குமார்


இந்த நிலையில், மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்த நிலையில், சூர்யா சோபன்குமாரை விட கூடுதலாக வாக்குகள் பெற்று  மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.  திமுக தலைமை அறிவித்த மகாலட்சுமி யுவராஜ்  29 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த கவுன்சிலர் சூர்யா சோபன் குமார் 20 வாக்குகளையும் மட்டுமே பெற்றார்.  பதிவான 50 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவாகியது.