தமிழ்நாடு அமைச்சரை தகாத வார்த்தையில் பேசிய அமர் பிரசாத் ரெட்டியை,  சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


நாடாளுமன்ற கட்டடம்:


டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ஆனால், குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டுமென கூறி, திமுக காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். அதிலும், இந்து சமயத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட பூஜைகள் தொடர்பாகவும், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்:


கட்டிட திறப்பு நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி தனக்கு வழங்கப்பட்ட செங்கோலுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். இந்த புகைப்படங்களில் சமூக வலைதளங்கில் வைரலாக, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தான் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “செங்கோலுக்கு முன்பாக மோடி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் புகைப்படத்திற்கு மேலே, மூச்சு இருக்கா?? மானம்?? ரோஷம்??” என குறிப்பிட்டுள்ளார்.


ராஜீவ்காந்தி டிவீட்:


திமுக பிரமுகரகான ராஜிவ் காந்தி வெளியிட்ட பதிவில் “மேடையின் மேல் நின்று சமஸ்கிருதம் ஓதி சடங்குகள் செய்யும் ஸ்மர்த்த பார்ப்பனர்கள்! கீழே நிறுத்தபட்டு தேவார,திருவாசக தமிழ் பாடும் பார்ப்பனர் அல்லாத ஆதினங்கள்! சடங்கு செய்ய பார்ப்பனர்கள்.. கீழே நிறுத்தி வேடிக்கை பார்க்க ஆதினங்கள்.. இது தான் மனுநீதி ஆட்சி ஆதினங்கள் சடங்கு நடத்தினால் தீட்டா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.






அமர் பிரசாத் ரெட்டி:


இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜக பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமாக பதிலளித்துள்ளார். அதோடு ராஜீவ் காந்தியின் பதிவிற்கு ”திமுக கொத்தடிமைகளை மதிப்புக்குரிய ஆதீனங்கள் ஒரு புண்ணாக்கு கூட மதிக்கவில்லை. உங்களுக்கு எப்படி தான் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாம காலத்தை ஓட்ட முடியுதுன்னு தெரியல” எனவும் அமர் பிரசாத் ரெட்டி பதிவு செய்துள்ளார்.


திமுகவினர் ஆவேசம்:


திமுக அமைச்சரையும், தொண்டர்களையும் தகாத வார்த்தைகளில் பேசிய அமர் பிரசாத் ரெட்டியை, தற்போது திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் பாஜக மற்றும் திமுகவினர் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.