தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் கிடையாதா? தருமபுரி மாவட்டத்துக்கு துரோகம் செய்யும் மு.க.ஸ்டாலினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாமக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் எங்கள் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்து வருவதையும், மாவட்ட மக்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மத்துடன் செயல்பட்டு வருவதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தமது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவரை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்திருக்கிறார். தருமபுரி மாவட்டத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களுக்கு துணை போகும் அமைச்சர், தருமபுரி மாவட்ட மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் தலைவரை விமர்சித்தது கண்டிக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மத்துடன் இருக்கிறார்; மாவட்டத்திற்கு எதுவும் செய்ய மறுக்கிறார் என்பது தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளித்த அமைச்சர் பன்னீர் செல்வம், தருமபுரி மாவட்டத்திற்கு திமுக அரசு ஏதேனும் உருப்படியாக செய்து இருந்தால் அதை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், அப்படி சொல்வதற்கு எதுவும் இல்லாததால் எங்கள் தலைவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே தருமபுரி மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்த திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தருமபுரியில் இன்று நடந்த விழாவில் தருமபுரி மாவட்ட மக்களால் எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் ஒன்றைக்கூட அவர் அறிவிக்கவில்லை. அமைச்சர் பன்னீர்செல்வமோ இன்னும் ஒருபடி மேலே சென்று தருமபுரி& காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதுவே திமுகவின் பெரும் துரோகம் தான்.
‘‘தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும்’’ என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட வெறியர்கள் கூட இப்படி ஒரு வாதத்தை முன்வைத்திருக்க மாட்டார்கள். தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை தாங்கள் செயல்படுத்தவில்லை என்பதை மறைப்பதற்காக, காவிரித் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்று பன்னீர் செல்வம் கூறுவது பெருந்துரோகம் ஆகும். காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை ஆகியவற்றை கடந்த காலங்களில் திமுக எவ்வாறு தாரை வார்த்ததோ, அதேபோல் தருமபுரி& காவிரி உபரி நீர் திட்ட உரிமையையும் தாரை வார்க்க முயன்றிருக்கிறார் பன்னீர்செல்வம். இதற்காக அவரை தருமபுரி மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
காவிரி நீரைக் கொண்டு புதிய பாசனப் பகுதிகளை உருவாக்கக் கூடாது என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். தருமபுரி &காவிரி உபரிநீர் திட்டத்தால் பயனடையப்போகும் பகுதிகள் அனைத்தும் ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலங்கள் தான். ஏற்கனவே உள்ள பாசனப் பகுதிகளுக்காக, வெள்ளக் காலத்தில் கிடைக்கும் நீரை திருப்பும் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்திற்கு உரிமை உண்டு. தருமபுரி -& காவிரி உபரிநீர் திட்டத்திற்கு தேவைப்படும் தண்ணீர் வெறும் 3 டி.எம்.சி மட்டும் தான். அதுவும் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நீரில், வெள்ளக் காலத்தில் தான் இந்த தண்ணீரும் எடுக்கப்படும். இதற்கான அனைத்து உரிமைகளும் தமிழகத்திற்கு இருக்கும் நிலையில் அதை தாரைவார்ப்பது போல பேசியதன் மூலம் திமுகவின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது.
அமைச்சர் பன்னீர்செல்வம் வாதப்படி பார்த்தால், மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியாது. காவிரி &குண்டாறு திட்டத்தை செயல்படுத்த முடியாது. பன்னீர்செல்வம் போன்றவர்கள் தருமபுரிக்கு பாசனத் திட்டங்களை கொண்டு வராவிட்டாலும், அதற்கான உரிமைகளை தாரைவார்த்து விடாமல் இருப்பது நல்லது.
தருமபுரி சிப்காட், தருமபுரி & மொரப்பூர் ரயில்பாதைக்கு நிலம் கையகப்படுத்துவது போன்ற திட்டங்கள் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் அளித்துள்ள விளக்கங்கள் திமுக அரசின் தோல்வியை ஒப்புக்கொள்வதாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் மீது திமுக அரசு வன்மத்துடன் உள்ளது; தருமபுரி மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது என்ற எங்கள் தலைவரின் குற்றச்சாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்களும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையும் நிரூபித்துள்ளன. தருமபுரி மாவட்டத்திற்கு துரோகம் செய்யும் அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவர். இது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.