திமுக அமைதிப்பேரணி:
இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஞ்சி தந்த காவிய தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிறிருக்கும் செந்தமிழர் அறிஞர் - தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் - இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர், பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் கட்சியை சேர்ந்த முன்னணியினர் பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை காலை 07:00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலை வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
தொண்டர்களுக்கு அழைப்பு:
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். கழகத்தின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுபினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அனைவரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்” என, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.