12 மணி நேர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் இன்று இரவு சந்திக்கின்றனர். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேசமயம் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மேலும் அன்றைய தினமே ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. 12 மணி நேர சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பொதுமக்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


அதேசமயம்  இந்த புதிய சட்ட மசோதாவின் படி, 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. 8 மணி நேரம் வேலை கட்டாயம் என்ற நிலையில், 12 மணி நேரம் வேலை செய்யலாமா என்பதை தொழிலாளர்கள் தான் முடிவு செய்ய முடியும். இவை மின்னணுவியல் துறை நிறுவனங்கள், தோல் அல்லாத காலணியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும்  என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். 


இப்படியான நிலையில் மே 12 ஆம் தேதி,  12 மணி வேலை நேர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வழங்கப்படும் என  சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இன்று மதியம் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இரவு 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்ப்பு வலுத்துள்ளதால் 2023 தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.