திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை  என்றும், மக்கள் பிரச்சினைக்காக தேமுதிக என்றும் போராடும் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் சேலம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதூர், அகரம், தொப்பூர் கணவாய் உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும்,  காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பாளையம் புதூர் பேருந்து நிறுத்தத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பதற்கு உடனடியாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனவும், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பப்பட்டது.




இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய பிரேமலதா, தமிழகத்தில் அதிமுக, திமுக மாறி மாறி 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து செயல்படுத்துவதில்லை. கடந்த தேர்தலில் திமுக ஏராளமான அறிக்கையை கொடுத்தனர்.


ஆனால், இதுவரை எந்த திட்டங்களையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கான மாதம் ஆயிரம் வழங்கப்படவில்லை. அம்மா உணவகத்தை மூடிவிட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். இப்படி மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் செய்யாமலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த திட்டங்களை நிறைவேற்றாமலும் இருந்து வருகின்றனர் என பிரேமலதா குற்றம் சாட்டினார்.


மேலும் திமுகவில் 38 எம்பிக்கள் இருப்பதாக மார்தட்டி கொள்கிறார்கள். ஆனால் அந்த 38 பேரும் டம்மியாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விமானத்தில் சென்று வருவதற்காக மட்டுமே இருந்து வருகிறார்கள். இவர்கள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியில் பேசுவார்களா அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்களா? இவர்களுக்கு எதுவுமே தெரியாது. தேமுதிகவை விமர்சனம் செய்யக்கூடிய தகுதி, இவர்கள் யாருக்குமே கிடையாது என சரமாரியாக அவர் விமர்சித்தார். 


அதேசமயம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் பரிசல் தொழிலை நம்பியே தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பரிசல்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதனை உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எரிந்த பரிசலுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தேமுதிக மக்களுக்காக போராடிக் கொண்டே இருக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண